என் கவிதைகளில் சில.....

என் புதுக்கவிதைகள்,மரபுக்கவிதைகள்.About

நெருப்பில் நெய்யூற்று
ஆகுதி செய்
ஆணவம்,கன்மம்,மாயை
மும்மலங்களைப் பலியிடு!
அர்ப்பனம் செய்!
வரம் கேள்
விருப்பமே வேள்வி
வென்றெடு
சமர்ப்பயாமே!

ஈடுபாடு இல்லாமல் எச்செயலும் செய்துழன்று
மாடுபடும் துன்பமாய்த் துன்புற்று -வாடாமல்
பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய்த் திட்டமிட்டு
ஈடுபட்டுச் செய்வதே மேல்!

எதிர்பார்ப்பு இல்லாமல் ஏங்காமல் என்றும்
எதிர்வரும் தொல்லையை ஏற்றால் -எதிரியும்
இல்லாமல் என்றுமே இன்பமாய் வாழ்ந்திட
நில்லாமல் ஓடும் கலி!

மணிவிழாக் காணுகின்ற முத்துவீ ரப்ப
அணிமலர் கொண்டுன் அடியிணைகள்-வாழ்த்தி
உமையும் சிவனுமாய் வாழ்வும் வளமும்
அமைந்திட வேண்டினேன் நான்

நான்-மரம்,மண்,காற்று,வானம்,பூ,தீ,
பறவை,விலங்கு,வண்டு,பாம்பு,
மனிதன்.


நல்லவனாய் நீயிருந்தால் இன்புற் றிருப்பாய்
அல்லவனாய் நீயிருந்தால் துன்புறுவாய்-வல்லவனாய்
நன்மையும் தீமையும் நாடி யுணர்ந்து
நன்மையில் வாழ்ந்திடு நன்று

இம்மையில் உம்மை மறப்பேனோ கல்விதந்த
அம்மையே அப்பனே ஆசானே -உம்மை
மறந்தால் உயிர்வாழ்வேன் என்றில்லை நெஞ்சே!
இறந்தாய் எனவே இரு!

வாழ்ந்த கதையும் முறையாய் அரசாண்டு
வீழ்ந்த கதையும் வரலாறும் -தாழ்ந்த
தமிழா அறியாய் வரலாறு கற்று,
அமிழாதே மீண்டும் எழு!

எட்டி உதைத்தாலும் ஏசிடினும் பேசிடினும்
விட்டுப்போ என்றுகை விட்டாலும்-மட்டின்றி
நாய்கூட எச்சிலுண்டு நன்றியுடன் வாலாட்டும்
சேய்கூட மிச்சிலுண்டேன் அன்று.

உலகத்தில் மக்களெல்லாம் ஒன்றென்றே விதிகள்
இலக்கியங்கள் ஆக்கிவிட்டோம் பயனென்?-விலங்கினமாய்
எங்கெங்கும் தம்முள்ளே போரிட்டு வீழ்கின்றார்
எங்கே தவறு இயம்பு
கண்டிக்க முற்படும் கல்விசேர் ஆசிரியன்
தண்டிக்க முற்படும் தந்தையாம்-பண்புடையாய்
அண்டிவாழ் ஆசானைக் கண்டு தொழுதிட்டால்
உண்டுகாண் வீடெனும் பேறு

என் குருநாதன் மு.சிவச்சந்திரன் என் ஆசான்
பசியுடனே பட்டலைந்தேன் காதுவற்றிச் செத்தேன்
புசியுடனே என்றுதமிழ் தந்தாய்-வசிட்டரே
செஞ்சிவனின் வார்சடையில் தங்குசிவச் சந்திரரே
அஞ்சுமிவன் புன்தலைவை தாள்.
அறியாச் சிறுவனென்றன் அன்பற்ற சொற்கள்
சிறியப் பொருள்களெல்லாம் சான்றோர்-அறிவாரே
கன்னல்போல் தித்திக்கும் பிள்ளை மழலையை
அன்னை வெறுப்பதுண்டோ?
இகழுடம்பு போகத்தான் போகுமாமே நல்லதாமே
புகழுடம்பை பூமியிலே போக்கா-நிகழ்த்திட்டால்
செத்தபின்னும் சாகாமல் நின்றிருப்பாய் செஞ்சிவன்மேல்
பித்தமுடன் பக்தியோடு வாழ்!


நான் என்னைவிட எதிலும்
மிகக்குளித்ததில்லை,
எதில் குளித்ததை விடவும்
என்னில் குளித்ததில்
அதிகம் நீங்கியிருக்கிறது அழுக்கு.

அம்மா என்
அத்தனை செல்களிலும்
நீயும் என் தந்தையும்
ஆனால் என் இதயத்தின் செல்களில் மட்டும் நீயே!
அம்மா!
அடுத்த பிறவி
உண்மை எனில்
அதில் நான்
அமீபா ஆயினும்
அதன் ஒரு செல்லும்
உன்னுடையதாய்
இருக்கட்டும்….என் முதல் கவிதைபுதுக்கவிதை .

அன்பழகன்(மருவத்தூர் அடிகளின் மகன்)

தொண்டு நெறி துளங்க வந்த தூயவன்!

ஒரு மனிதன் தெய்வம் ஆகிறான்

அவர் யார்?
ஈட்டிய தொகையில் கொடையாய்
மீதியைக் கொடாமல்
பாதியைக் கொடுப்பவர்.
பிரிய மாணவர்களுக்குப்
பிரியமானவர்.
அவர் அன்பு இல்லாதவர் அல்ல
அன்பில் ஆதவர்.
மனம்.சொல்.செயல்
மூன்றும் ஒன்றானவர்.
இவருக்குப் பிடித்தவை மூன்று
தேசம்,தெய்வீகம்,தொண்டு.
இவருக்கு மதம்பிடிக்காது ஏனெனில் இவருக்கு மதம் பிடிக்காது.
அஞ்சா நெஞ்சினர் தீமை செய்யா பிஞ்சு நெஞ்சினர்.
கல்வி,செல்வம்,வீரம் மூன்றில் எது பெரிது எனில் இவற்றினும் நடத்தையே பெரிதென்பார்.
ஆண்ட இனத்தின் அரசர் இவர்
வேண்ட அனைத்தும் தருபவர் இவர்.
என் சின்ன நாக்கால் அவரின்
பெரிய புகழைப்பாட முடியாது.மௌனத்தால் மட்டுமே இயலும்.


எங்கள் பெரியவர்

அன்பழகன் என்பதோர் வள்ளல்தாம் எழையர்
இன்புறவே எல்லோர்க்கும் தந்தாரே-முன்புளோர்
கிள்ளிக் கொடுத்தனர் செல்வங்கள் என்றிட
அள்ளிக் கொடுப்பார் அவர்.


திருமதி அம்மா வணக்கம்.2(அடிகளின் மனைவியார்)

பூவோடு சேர்ந்திடும் நாரும் மணந்திடும்
பூவோடு பூவினைச் சேர்த்திடும்-பூநார்
புலப்படா தெங்குமே மாலையில் நாரும்
புலப்படா வேரும் ஒன்று.

சக்திதிருமதி அம்மா வணக்கம்.1

கலைமகளோ என்று வியந்தேன் அறிவை,
மலைமகளோ என்று மலைத்தேன்_அலையில்
உதித்த இலக்குமி அன்னையே உன்னைத்
துதிக்க மறப்பேனோ நான்.


அடிகளார்வணக்கம் 2

பங்காரு என்றால் தங்கம்
பாருங்கள் அடிகளார் சிங்கம்
சொல்லுங்கள் புகழை எங்கும்
கல்வியும் செல்வமும் தங்கும்.


அடிகளார்வணக்கம் 1.

இங்காரும் இன்னருள் எய்தலாம் இம்மையே
அங்காரும் அஞ்சிடேல் என்றுரைப்பார்-தங்குபுகழ்ச்
சங்காரும் மாமருவூர்ப் பாட மறுமையும்
பங்காரு உண்டே துணை.


Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

தத்துவ நோக்கில் பாரதி

தொல்காப்பியத்தில் மெய்யியல்(தத்துவம்)