மனிதர்களை அறிய வள்ளுவம்காட்டும் வழிகள்!

               மனிதர்களை அறிய வள்ளுவம் காட்டும் வழிகள்;
                                  முனைவர் ச.இரமேஷ்,
                                  உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,
                                  ஸ்ரீசங்கரா கலை,அறிவியல் கல்லூரி,
                                  ஏனாத்தூர்,காஞ்சிபுரம்-631561.
       முன்னுரை; ‘மனம்’ உடையவனே  ‘மனிதன்’ ஆகிறான், இதைத்தான் தொல்காப்பியர்,
          ’’ஆறறிவதுவே அவற்றொடு மனனே’’ என்றும்
          ‘’மக்கள்தாமே ஆறறிவுயிரே’’   என்றும் குறிப்பிடுகிறார்.
          -(பொருளதிகாரம்-இளம்பூரணம்,நூற்பாக்கள்-571,577).
மனிதன் என்ற சொல்லுக்கு மக்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார், தொல்காப்பியர்.மனிதன்,மானுடன் இரண்டும் ஒரே பொருள் கொண்ட சொற்களாகும்.’மேம்பாடு’ என்பதற்கு ‘மேன்பாடு’ என இராட்லர் அகராதியும்,தமிழ் லெக்சிகன் ‘சிறப்பு’ எனவும் மதுரைத்தமிழ்ப்பேரகராதி ‘உயர்தல்’,’சிறத்தல்’,’மேலாதல்’ எனவும்,க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதி ‘இருக்கும் நிலையிலிருந்து அடையும் மேலான நிலை’ எனவும் பொருள் கூறுகின்றன.எனவே மானுட அல்லது மனித மேம்பாடு என்பதற்கு ‘தற்போதுள்ள நிலையைவிடச் சிறந்த,மேம்பட்ட, உயர்ந்த நிலையை மனிதன் உள்ளும் புறமும் அடைதல்’ எனப்பொருள் கொள்ளலாம்.
       மானுட மேம்பாட்டிற்கு நல்லோர் உறவும் அல்லோர் பிரிவும் மிகத் தேவையாகும்.நல்லோரின் துணையைவிடச் சிறந்த உறவுமில்லை,தீயோரின் உறவைவிடத் துன்பம் எதுவும் இல்லை.இதனை,
            ‘’நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
            அல்லற் படுப்பதூஉம் இல்’’(460)
என்றார் வள்ளுவர்.நல்லோரையும் அல்லோரையும் இனம்காண்பது எளிதன்று என்பதை வள்ளுவர் பல இடங்களில் கூறுகிறார்.கயவர்கள் நன்மக்களைப் போலவே காணப்படுவர்.அதுபோன்ற ஒற்றுமையை நான் வேறெங்கும் கண்டதில்லை(1071),புறத்தே குன்றிமணிபோல செம்மை உடையவராகத் தெரிந்தாலும் உள்ளத்தில் குன்றிமணியின் மூக்குப்போல கறுத்து குறைவு உடையவர்களாக இருப்பவர்கள் பலர்(277),மனதில் மாசு நிறைந்திருக்க மாட்சிமிகு முனிவர்போல நீராடி நடித்து வாழ்பவர்கள் பலர் உள்ளனர்(278) என்று வள்ளுவர் கூறுகிறார்.
         மனிதர்களை நல்லோர் தீயோர் என எவ்வாறு அறிவது? உடம்பால் ஒத்திருப்பதாலேயே அது மனித ஒப்புமை ஆகாது. ஆனால் பண்பால் ஒத்திருப்பவனே மனிதன் (993), மனிதனின் அகத்தூய்மையை அவன் வாய்மையே காட்டிவிடும்(298), அம்புநேராக இருந்தாலும் கொடியது, யாழ்வளைந்து இருப்பினும் இனியது அதுபோலத் தோற்றத்தால் அல்லாது அவனது வினையால்தான் மனிதனைக்கண்டறிய வேண்டும் என்கிறார்(279). எனவே பண்பாலும்(எண்ணம்) வாய்மையாலும்(சொல்)வினையாலும்(செயல்) மனிதனை அறிய வள்ளுவம் காட்டும் வழியில் இக்கட்டுரை செல்கிறது.
எண்ணத்தின்வழி மனிதர்களை அறிதல்; மகிழும்படியாகக் கூடிப்பழகி உயர்ந்த பொருள்களைப்பற்றிப் பேசி இனி இவரை எப்போது காண்போமோ என உள்ளத்தால் ஏங்கிப்பிரிபவர்கள் அறிஞர்கள்(394), தாம் கற்றும் கேட்டும் இன்புற்ற பொருளை உலகோரும் இன்புறுவது கண்டு கல்வியை மேலும் விரும்புவது அறிஞர் பண்பாகும்.(399), நடுவுநிலைமையும் நாணமும் உயர்குடிப்பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை(951), ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கு இடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால் அவன் பிறந்த உயர்குலம் ஐயத்திற்குரியதாகும்(958),உண்மையான துறவிகள்,அறிவு எனும் அங்குசத்தால் ஐம்புலன்களை அடக்கியவர்கள்(24), துறவிகள் தான் என்ற ஆணவம் இன்றி இருப்பர்(268),ஒருவர் தினையளவு சிறிய உதவியைச் செய்திருந்தாலும் அதனைப் பனையளவாக நன்றியுடைவர்கள் கருதுவர்.(104),நன்மையை அறிந்தவர்கள் பிறரது துன்பம் அறிந்து வருந்துவர், ஆனால் கயவர்கள் மனதில் பிறரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலை இருக்காது(1072),கீழ்மக்கள் தமக்குக் கீழ்ப்பட்டு நடப்பவரைக்கண்டால் அவரைவிடத்தாம் மேம்பாடு உடையவராகக்கருதி இறுமாப்படைவர்.(1074),ஒருவரின் குணத்தையும் குற்றத்தையும் ஆராய்ந்து எதுமிகையோ அதன்படி உறவோ பகையோ கொள்க(139),சான்றோரின் சால்பு, தீயவற்றைச்செய்ய நாணும் நல்ல தன்மையை இருப்பிடமாகக்கொண்டது(1013),சான்றோர்க்கு அணிகளனாக விளங்குவது நாணமாகும்(1014),சான்றோர் பிறர்க்குவரும் பழிக்காகவும் தமக்கு வரும் பழிக்காகவும் நாணுவர்(1015) அதனால் கயவர் பழிக்கு அஞ்சார் என்பது பெறப்படும்.தீயவழியிற்செலுத்தாமல் காக்கும் நாணத்தை நல்லோர் துறக்கமாட்டார்கள்(1017),உயர்குடியில் பிறந்து அன்புடையவர்களாக விளங்குபவர்கள் பண்புடையவர்களாக இருப்பது வழக்கம்(992),தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும் தோல்வியை ஒப்புக்கொள்வது ஒருவரின் சால்பை அளக்கும் கருவியாகும்(986),கடல்போன்ற சால்புடையவர்கள் ஊழியால் உலகம் அழிந்தாலும் சால்பைக்கைவிடார்(989),மேல் நிலையில் உள்ளோரிடத்தில் மேன்மைப்பண்புகள் இல்லாவிடில் அவர்கள் மேலோர் ஆகார்,அதுபோலவே கீழ்நிலையில் உள்ளோரிடத்தில் கீழ்மைப்பண்புகள் இல்லாவிடில் அவர்கள் கீழோர் அல்லர்(973), ஒருவர் பேராசையின்றியும் உண்மையுடனும் இருந்தால் அவர் மனத்தூய்மை உடையவராக இருப்பார்(364),நல்லகுடியிற்பிறந்து,குற்றம்நீங்கி,பழிச்செயலஞ்சும் நாணம் உடையவரையே நம்பி ஏற்கவேண்டும்(502),முழுமையாகக்குற்றம் இல்லாது இருத்தல் இயலாது என்பதால் ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றில் மிகையானதைக் கொண்டு உறவோ பிரிவோ கொள்ளவேண்டும்(504),பெரியோர் என்றும் பணிவுடன் இருப்பர்;சிறியோர் தன்னையே வியந்து புகழ்ந்துகொள்ளுவர்(978),பெரியோர் செருக்கின்றி இருப்பர்;சிறியாரோ செருக்கின் உச்சத்திற்கே செல்வர்(979), அறிவில்லாதவன் தன்சிற்றறிவால் தான்கேட்டவற்றில் தானுணர்ந்ததையே முழு உண்மையாகக்கொள்வான்,அவனுக்குக் கூறியவனோ அறிவிழந்து நிற்பான்(849),எனவே அறிவற்றவனுக்குக் கூறக்கூடாது என்பதும் அறிவிலி உண்மை உணரான் என்பதும் கருத்து.தகாதவற்றிற்கு நாணாதவன்,தக்கவற்றை நாடாதவன்,அன்பு இல்லாதவன்,நல்லவற்றை விரும்பாதவன் இவனைப் பேதை என அறியவேண்டும்(833). பெரியோர்களை மதித்துப் போற்றவேண்டும் என்ற உயர்நோக்கம் அவர்களின் சிறப்பை உணராத சிறியோர் உணர்வில் இருக்காது(976), எனவே பெரியோரை மதிக்காதவரைச் சிறியோர் என அறியலாம். மேலே கூறப்பட்ட திருவள்ளுவர்தம் கருத்துக்களைச்சிந்தித்து மனிதில் பதியச்செய்து மனிதர்களின் பண்பை அறியவேண்டும்.

சொற்களின்வழி மனிதர்களை அறிதல்; நுட்பமான பொருள்களைப் பற்றிய கேள்விஞானம் உடையவர்கள் வணக்கமான, அடக்கமான சொற்களால் பேசுவார்கள்.(419), உயர்குடியில் பிறந்தவர் இயல்பாக வாய்மையிலிருந்து வழுவால் நன்னெறியில் வாழ்வர்.(952),உண்மையான உயர்குடியில் பிறந்தவர்கள் இன்சொல் பேசுபவர்களாகவும் பிறரை இகழ்ந்து பேசாதவர்களாகவும் இருப்பர்(953),நிலத்தில் கிடந்த விதை இன்னது என்பது அது முளைத்து வந்தால் தெரியும் அதுபோல நற்குடிப்பிறந்தோரின் வாய்ச்சொல் அவரை அடையாளம் காட்டும்(959).துறவிகளின் பெருமையை அவர்களது மறைமொழிகள் காட்டும்(28),தீயசொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம் ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லை(139),தன்மீதுள்ள நம்பிக்கையால் கூறப்பட்ட இரகசியத்தை அதனைச்சற்றுக் கூட்டி அறையும்பறைபோல எல்லோரிடத்திலும் கூறுபவர் கயவர் ஆவார்(1076), மனதால் பொருந்தாமல் நம்மோடு பழகுகின்றவரின் சொற்களை எந்தச்செயலிலும் நம்பக்கூடாது(825),ஒருவரின் அகத்தூய்மை அவரது பேச்சின் உண்மையால் வெளிப்படும்(298), பெருமைப்பண்புடையோர் பிறர்குற்றத்தை மறைப்பர்;சிறுமையுடையோர் பிறரது குற்றத்தையே கண்டு எடுத்துச்சொல்லுவர்(980),உலகத்தார் உண்டு என்பதை இல்லை என மறுப்பவன் உலகோரால் பேயாக எண்ணி விலக்கப்படுவான்(850),எனவே ஊருடன் வேறுபடுவன் சிற்றறிவுடையவன் என அறியவேண்டும்.இவ்வாறாக வள்ளுவர் காட்டும் வழிகள் கொண்டு மனிதனின் வாய்மை வழி மனிதனை நல்லார்,பொல்லார் என அறியவேண்டும்.

செயல்களின் வழி மனிதர்களை அறிதல்; குறிப்பறிதல் என்ற அதிகாரத்தை வள்ளுவர் பொருளதிகாரத்தில் அமைச்சியலிலும் இன்பத்துப்பாலில் களவியலிலும் வைத்தார். செயல்களின் வழியும் மெய்ப்பாடுகளின் வழியும் மனிதனின் உள்ளக்கருத்தை அறியமுடியும்.அவ்வாறு அறிபவனை உலகின் அணிகலன்(701),என்றும் தெய்வத்தோடு ஒப்பானவன்(702), என்றும் அப்படிப்பட்டவனை எதைக்கொடுத்தாவது பெறவேண்டும்(703) என்றும் வள்ளுவர் சிறப்பிக்கிறார். ஒருமனிதனின் எண்ணத்தை அவன் பேசாமலேயே அவனது முகம்,கண் இவற்றைக்கொண்டு அறியலாம் என்கிறார்(706,709),  தன்னை அடுத்துள்ள பொருள்களைக் கண்ணாடி காட்டுவதுபோல எண்ணத்தில் உள்ளதை முகம் காட்டிக்கொடுக்கும்(706), உயர்குடிப்பிறந்தார் ஒழுக்கத்திலிருந்து பிறழமாட்டார்(952),முகமலர்ச்சி உடையவராகவும் ஈகை செய்பவராகவும்  விளங்குவர்(953),பெரியோர் செயற்கரிய செயல்களைச் செய்வர்,சிறியோரால் அது இயலாது(26),அந்தணராகியஅறவோர் எவ்வுயிர்க்கும் தீங்குசெய்யாது கொல்லாமையை மேற்கொள்வர்(30),துறவிகள் தனக்குவந்த துன்பத்தைத் தாங்கிக்கொள்வர்(261),அன்புடையோரின் அன்பினை அவர்களது கண்ணீரே வெளிப்படுத்தும்(71),அன்புடையோர் தம் எலும்பினையும் பிறர்க்கென வழங்கிவிடுவர்,அன்பிலாதோர் பிறரின் பொருள்களைக்கூட தனக்கு உரிமையாகக் கொள்வர்(72), அறவழிப்படுத்த மறச்செயல் செய்பவரும் அன்புடையோரே(76),பெரியோர் சிற்றினத்தாருடன் சேர அஞ்சுவர்,ஆனால் சிறியோரோ தம்போன்ற சிற்றினத்தவரைக்கண்டால் சுற்றத்தாரைப்போல சூழ்ந்துகொள்வர்(451),கயவர்கள் அறத்தைப்பற்றிக் கவலையின்றி மனம்போன போக்கில் செயல்படுவர்((1073),கீழ்மக்களின் ஒழுக்கத்திற்குக் காரணமாக இருப்பது அச்சமே ஆகும், அவர்கள் சிறிது ஒழுக்கத்துடன் இருந்தால் அது நன்மைவிளையும் என்ற அவர்களது பேராசையால் வந்ததாகும் (1075),அதாவது அவ்வொழுக்கம் இயல்பானதல்ல!கயவர்கள் ஈரக்கையைக் கூட உதரமாட்டார்கள் அதாவது ஏழைகளுக்கு உதவமாட்டார்கள்(1077),அணுகி நம் குறையைச்சொல்லிய அளவிலேயே சான்றோர் உதவிசெய்வர்,ஆனால் கீழ்மக்களோ துன்புறுத்தினால் மட்டுமே பயன்தருவர்(1078),பிறர் நன்கு உடுப்பதையும் உண்பதையும் கண்ட கீழ்மகன் பொறாமையால் அவர்கள்மீது குற்றங்களை வலிந்து காண்பான்(1079),கயவர்கள் ஒருதுன்பம் வருமானால் மானமின்றித் தன்னை விற்றுக்கொள்ளவும் தயங்கமாட்டார்கள்(1080), பகைவரின் பணிவான சொற்களை உண்மையென நம்பக்கூடாது, அது வில்வளைவு துன்பம் தருவதைப்போன்றது(827),பகைவரின் வணங்கிய கையுள்ளும் கண்ணீரிலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும்(828),பயனுள்ளபோது நட்புச்செய்து தேவையில்லாதபோது நீங்கிவிடுதல் தீயநண்பர்களின் செயலாகும்(812),போரில்கைவிட்டோடும் கல்லாத குதிரைபோன்று ஆபத்தில் கைவிடும் நட்பும் முடியக்கூடிய செயலையும் முடியாது தடுக்கும் நட்பும் தீயநட்பாகும்.(814,818),சொல்லும் செயலும் வேறுபட்டோரின் தொடர்பு கனவிலும் இன்னாதது (819),தனியே வீட்டில் கூடிப்பழகி பலர்கூடிய மன்றத்தில் பழிப்போர் தீயநண்பர்கள் ஆவர்(820),நற்குணம்,நற்குடிப்பிறப்பு,நல்ல நட்புடையோர்,பழிக்கு அஞ்சுபவர்,தவறுகளை இடித்துரைப்பவர்,உலகநடப்பு  அறிந்தோர் ஆகியோர் சிறந்த நண்பராவர்(793-795),பழகப்பழக பண்புடையாளர் தொடர்பு இன்பம் பயக்கும்(783),ஒருவரது மனத்தூய்மையும் செயலின் தூய்மையும் அவர்கொள்ளும் நட்பைப்பொறுத்தே அமையும்(455),அழிவைத்தரும் தீமைகளை நீக்கி,நல்லவழியில் நடக்கச்செய்து,துன்பம்வந்த காலத்தில் உடனிருந்து துன்புறுபவனே நல்லநண்பனாவான்(787),ஒருசெயலை ஒருவனிடம் ஒப்படைக்கும் முன்பு  இச்செயலை இக்கருவியால் இன்னவன் முடிப்பான் என ஆய்ந்து ஒப்படைக்கவேண்டும்(517),அன்பு,அறிவு,ஐயமற்று அறியும் ஆற்றல் கொண்ட பேராசையற்ற ஒருவனிடம் ஒருசெயலை ஒப்படைக்கலாம்(513),மக்களுடைய குணங்களாகிய பெருமைக்கும் சிறுமையாகிய குற்றத்திற்கும் ஆராயும் உரைகல்லாக இருப்பது அவர்களுடைய செயல்களேயாகும்(505),சுற்றத்தின் தொடர்பைக்கைவிட்டவரை நம்பி ஏற்கக்கூடாது ஏனெனில் அவர் சுயநலத்தினால் உறவுகளை நீக்கியவர் ஆகையால் பழிபாவங்களுக்கு நாணமாட்டார்(506),தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாது,தானும் உணர்ந்து செயல்படாத அவ்வுயிர் பிறர்க்கு சாகும் அளவும் தீராத நோய் போன்றது(848),உலகத்தோடு ஒட்ட ஒழுகாதவர் கற்றவர் எனினும் கல்லாதவரே ஆவர்(140). இவ்வாறு,மனிதனின் செயல்கண்டு அவனை அறியும் கலையை வள்ளுவர் மிக நேர்த்தியாகக் காட்டுகிறார்.
முடிவுரை;  ஒருதேர்ந்த உளவியல் வல்லுநரைப்போல மனிதனின் எண்ணம்,சொல்,செயல்(மனம்,வாக்கு,காயம்) ஆகியவற்றின் மூலம் மனிதனை நல்லவன்,தீயவன்,தக்கான்,தகவிலான் என்றறியக்கூடிய வழிகளை திருவள்ளுவப்பெருந்தகை எடுத்துரைக்கிறார்.இவற்றை வாழ்வியலில்,அரசியல்,வணிகவியல்,நிர்வாகவியல் போன்ற துறைகளிலும் பயன்படுத்தினால் மானுடம் மேம்படும் என்பதில் ஐயமில்லை.மேற்கூறிய பல்வேறு துறைகளில் இன்னும் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ள இடம் இருக்கின்றது என இவ்வாய்வாளர் கருதுகிறார். 
       

Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

தத்துவ நோக்கில் பாரதி

தொல்காப்பியத்தில் மெய்யியல்(தத்துவம்)