கட்டவிழ்ப்புப் பார்வையில் வினைக்கொள்கை:

                கட்டவிழ்ப்புப்பார்வையில் வினைக்கொள்கை.
                                       முனைவர் ச.இரமேஷ்,
                                       உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,
                                       ஶ்ரீ சங்கரா கலை,அறிவியல் கல்லூரி,
                                       ஏனாத்தூர்,காஞ்சிபுரம்.
      கட்டுடைத்தல் அல்லது கட்டவிழ்ப்பு (Deconstruction) என்பது ழாக் தெரிதா(Jacques Derrida-1967) என்பவரால் விளக்கப்பட்ட பின்நவீனத்துவ சிந்தனை அல்லது ஆய்வுப்பார்வையாகும்.’’இலக்கியத்தைப் பொறுத்தவரை ‘கட்டவிழ்ப்பு’ என்பது ஒருவாசிப்பு முறை. எந்தவொரு இலக்கியப்பிரதியிலும் மையம் (எதிர்) மற்றமை  என்ற இரு (எதிரெதிர்) கூறுகள்  உண்டு. ஒருபிரதியை நாம்வாசித்தவுடன் நம்மனதில் தோன்றும் முதல்கருத்து அந்த ஆசிரியரால்  பிரதியில் முன்வைக்கப்பட்ட கருத்து (மையம்) ஆகும். கொஞ்சநேரம் கழித்து நாம் அந்தப்பிரதியை ஆய்ந்துபார்க்கும்போது நமக்கு அந்தப்பிரதியில் ஒளிந்திருக்கும் வேறுகருத்து புலனாகும்.அந்த இன்னொரு கருத்து விளிம்பு (மற்றமை) ஆகும். ஒருவாக்கியத்தைப் பலவிதமாக நாம்புரிந்துகொள்ள  வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்படி ஒருவாக்கியத்தை ஒன்றுக்கு மேற்பட்ட பலபொருள்கொண்டு பார்ப்பது கட்டவிழ்ப்பு என்று அழைக்கப்படுகிறது’’
       கட்டவிழ்ப்பை, ரொலான் பார்த் என்பவர் விளக்கினார். ‘’ஒரு பிரதி(படைப்பு) படைக்கப்பட்டவுடன் படைப்பாளன் இறந்துவிடுகிறான்.ஏன் எனில் மொழி அல்லது படைப்பாளனின் குறைபாட்டால் அவன் நினைத்தது ஒன்று எழுதியது வேறொன்று, பிறகு பிரதி பிறக்கிறது, அதைப்படைத்தவன் வாசிக்கிறான்  இப்பொழுது அவன் வாசகன் மட்டுமே.படிக்கும்போது அதன்குறைகள் தெரிகின்றன, இப்பொழுது அவன் விமர்சகன்.என்று கட்டவிழ்ப்பை 1.ஆசிரியன், 2.பிரதி, 3.வாசகன், 4.விமர்சகன் என நான்காகப்பிரித்தார். ரொலான் பார்த் பிரதி தரும் இன்பம் மட்டுமே இன்றியமையாதது என்றார். இரண்டாவதாக அவர் வலியுறுத்தியது படைப்பாளனின் மரணம் என்பதாகும்.’’ – (எம்.ஜி.சுரேஷ் ‘’நவீன இலக்கியக்கோட்பாடுகள்’’ (mgsuresh.blogspot.in).) இந்தக் கட்டவிழ்ப்பு முறையைப் பின்பற்றி இக்கட்டுரை அமைகிறது.
வினையை ஊட்டுவது குறித்த மரபான மையக்கருத்துகள்;
      செய்கின்ற செயல்களுக்கு எதிரான சம அளவு விளைவு நிகழும் என்பது அறிவியல். செயல்களை வினைகள் என மெய்யியல் பெயரிடுகிறது.நல்லசெயல் நல்வினை என்றும் தீச்செயல் தீவினை எனவும் கூறப்படுகிறது. நல்வினைக்கு நன்மையும் தீவினைக்குத் தீமையும் விளையும் என்று தமிழ்மெய்யியலும் இலக்கியமும் கூறுகின்றன.
           ‘’நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
           இல்லை என்போர்க்கு இனன் ஆகிலீயர்,(புறநானூறு-29).
வினைகளுக்கான பயனை இறைவனே ஊட்டுகிறான் என்பது சைவசமயக்கொள்கை,இதனை,
          ‘’ இருவினை இன்பத் துன்பத்து இவ்வுயிர் பிறந்து இறந்து
           வருவது போவதாகும் மன்னிய வினைப்பலன்கள்
           தரும் அரன் தரணியோடு தராபதிபோலத்தாமே
           மருவிடா வடிவும் கன்ம்பலன்களும் மறுமைக்கண்ணே’’(-சிவஞானசித்தியார்,2-94) என்றபாடல் விளக்குகிறது.
வினைகள் தாமே வினைசெய்தோரைச் சென்றடையும் என்பது சமணமதக்கொள்கை.இதனை,
         ‘’ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்’’(-சிலப்பதிகாரம்,பதிகம்-57 அம் அடி)
என்ற அடியால் அறியலாம். இவை பிரதியின் மையமாகும்.
பிரதியின் கட்டுடைத்த விளிம்பு அல்லது மற்றமைக்கருத்தாக இக்கட்டுரை முன்வைக்கும் கருத்து கீழே தரப்பட்டுள்ளது.
        வினைசெய்தோர் தாம் செய்த வினைகளுக்கு ஏற்ப மனம் மற்றும் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவர். அந்த பாதிப்பு அவர்களுடைய செயல்களில் பிரதிபலிக்கும். நல்வினைசெய்தோர் நல்மனமும் நல்லுடலும் பெறுவர், அதனால் அவரது செயல்கள் ஊக்கமும் ஆக்கமும் பெற்று வெற்றிபெறும். தீவினை செய்தோரின் உள்ளமும் உடலும் குற்றவுணர்ச்சியாலும் மனவுளைச்சலாலும் உடல் சோர்ந்து அவர்கள் செய்யும் செயல்கள் தோல்வியடையும் என்பது மனித அனுபவத்தால் உணரத்தக்கது.’’தீதும் நன்றும் பிறர்தரவாரா’’ என்பதன் பொருளும் இவ்விடத்துக் கருதத்தக்கது. இதுவே இக்கட்டுரையின் கருதுகோள். தமிழ் இலக்கியங்களில் நேரடியாக அதற்கான சான்றுகள் இல்லாவிடினும் மறைமுகமாகக் கட்டுடைத்துப் பார்த்தால் சிலபாடல்களில் இதற்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன.
இற்செறித்தலின் விளைவுகள்; காதல் வயப்பட்ட தலைவியின் வாழ்க்கை தவறான பாதையில் சென்றுவிடுமோ என அச்சமுற்ற பெற்றோர், அவளை இற்செறித்தனர், தலைவன் சிறைப்புறத்தானாக வரைவுநீட்டித்தவிடத்து அவனுக்கு இற்செறிப்பு உணர்த்த தோழிகூறும் இப்பாடலில்
           ‘’ விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
           இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
           அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம்’’-நற்றிணை(68)
என்ற அடிகள் கூறும்கருத்து ‘இளையாரோடு ஓரை என்னும் விளையாட்டினை விளையாடாது இளையோர் வீட்டினுள் சிறைவைக்கப்படுவது அறமும் அல்ல, ஆக்கமும் (செல்வமும்) தேயும்.’ என்பதாகும். இப்பாடலில் அறம் மீறப்பட்டால் செல்வம் அழியும் என்பது வலியுறுத்தப்படுகிறது. இது மரபான மையக்கருத்து ஆகும். ஆனால் எவ்வாறு செல்வம் தேயும்?  செல்வத்தைத் தேய்த்து அழிப்பது யார்? என்பன சொல்லப்படவில்லை.  இப்பாடலின் விளிம்பு அல்லது மற்றமைப்பொருளாக ஆய்வாளர் கருதுவது ‘காதலுக்குத்தடையாக வீட்டில் இளையோர் (ஆண்,பெண்) அடைக்கப்பட்டால் / தடுக்கப்பட்டால் அவர்களது உடல்,உள்ளப்பாதிப்பாலும் அவர்களை அடைத்துவைத்த பெற்றோரது மனச்சான்றுக்கு விரோதமான செயலால் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியாலும் சினத்தால் ஏற்படும் உடல் உள்ளப் பாதிப்பாலும் அவர்கள் எல்லோருடைய செயல்களும் தோல்வியடைந்து செல்வம் அழியும்’ என்பதாகும்.
இதனை மேலும் அறிய இன்னொரு பாடல்கருத்து விளக்கப்படுகிறது.
நொதுமலரால் விளையும் தீமைகள்;
         கலித்தொகையில் ஒரு தலைவி ஆற்றில் அடித்துச் செல்லப்படும்போது அருளால் தலைவன் பாய்ந்து அவளைத்தன் மார்புடன் சேர்த்து அணைத்துக்கரை சேர்த்தான்,எனவே அவனைக் கற்புடைய  பெண்ணாகிய அவள் காதலித்தாள்,இப்போது நீவீர் அவனைவிடுத்து வேறு ஒருவனுக்கு மணம் முடித்தால் (நொதுமலர்) அறமல்லாத செயலைச்செய்தால், மலையில் வள்ளிக்கிழங்கு வேர்விடாது; மலையில் தேன்கூடு அமையாது; தினை கதிர் விடாது என்று தோழி அறத்தோடு நிற்கிறாள்.
            ‘’சிறுகுடியீரே! சிறுகுடியீரே!-
             வள்ளிகீழ்வீழா; வரைமிசைத்தேன் தொடா;
             கொல்லை குரல் வாங்கி ஈனா-மலை வாழ்நர்
             அல்லபுரிந்து ஒழுகலான்;’’(கலித்தொகை-39)
என்னும் இப்பாடல் அடிகளின் மரபார்ந்த மையக்கருத்து மேலேகூறப்பட்டது. இப்பாடலிலும் கிழங்கு ஏன் வேர்விடாது?,தேன்கூடு ஏன் அமையாது? ஏன் தினை விளையாது? என்பதற்கும் யார் அவ்வாறு செய்வார் என்பதற்கும் விடை இல்லை. இப்பாடலின் விளிம்பு அல்லது மற்றமைப் பொருளாக ஆய்வாளர் கருதுவது காதலித்தோரை அன்றி வேறு ஒருவருக்கு நொதுமலர் மணம் நிகழ்ந்தால் அதனால் ஏற்படும் உடல்,உள்ளப்பாதிப்பால் ஏற்படும் உழைப்புக் குறைபாட்டால் கிழங்கும் தேனும் தினையும் விளையாது என்பதாகும். இயற்கையாக விளையும் தேனும் விளையாதா என வினவின் தேனும் காலம் பார்த்து பேணிப்பெறப்படுவது என்பது எண்ணத்தக்கது.
          கட்டவிழ்ப்பு என்பது பற்றிய ழாக் தெரிதா, ரொலான் பார்த் ஆகியோரது கருத்துக்கள்; வினைக்கொள்கை பற்றிய மரபான மையம் சார் கருத்துகள்; வினைகுறித்த சைவ,பௌத்த மதக்கருத்துக்கள்;  வினைகுறித்த தமிழ்ச்சங்க இலக்கியப்பாடல் சான்றுகளோடு விளிம்பு நிலை அல்லது மற்றமைக்கருத்துகள் தீதும் நன்றும் பிறர்தரவாரா என்பதன் அடிப்படையில் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

தத்துவ நோக்கில் பாரதி

தொல்காப்பியத்தில் மெய்யியல்(தத்துவம்)