குமரகுருபரரின் மீக்கற்பனை

          குமரகுருபரரின் மீக்கற்பனை
முனைவர் ச.இரமேஷ்.

சிற்றிலக்கியங்களின் பொதுவான தன்மைகளாக மிகுதியான கற்பனை, தனிமனிதப்புகழ்ச்சி, கடவுள் நம்பிக்கை, எளிய மக்கள் பற்றிய சித்திரிப்பு ஆகியவற்றைக்கூறலாம். இவற்றில் அதீத மீக்கற்பனையே குமர  குருபரரிடத்தில் விஞ்சித்தோன்றுவதாகக் கருதலாம்.   இதனைத்தண்டி இலக்கணத்தில் உயர்வு நவிற்சி அணி அல்லது அதிசய அணி என்பர்.
‘’மனப்படும் ஒருபொருள் வனப்பு உவந்து உரைப்புழி
உலகவரம்பு இகவா நிலைமைத்து ஆகி
ஆன்றோர் வியப்பத்தோன்றுவது அதிசயம்’’1.அதாவது எல்லை மீறாது ஒரு பொருளின் தன்மையை ஆன்றோர் வியக்கும் படி கற்பனையில் உவமித்தலாகும். அவ்வாறு வெளிப்படும் கற்பனையின் சுவைகளை இந்த ஆய்வுக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.
குருபக்தியின் உச்சம்; குமரகுருபரரின் குருநாதர் தருமபுர ஆதீனத்தின் நான்காம் சந்நிதானமாகிய சீர்வளர்சீர் மாசிலாமணிதேசிகர் ஆவார்.அவரைப்புகழ்ந்து வணங்கிக்குமரகுருபரர் பாடியது பண்டார மும் மணிக்கோவை என்னும் நூலாகும். அந்நூலில் குமரகுருபரர்  தனது குருநாதரிடம்இறவா நிலை பெற்று இன்பம் ஆர்ந்திருக்கும் பிறவா நன்னெறி வழங்குக. அது அரிதானால் நான் வேண்டும் பிறவியை வழங்குக! அது இந்திரனாக அரசு வீற்றிருக்கும் பிறவியல்ல!,பிரம்மனாகி உயிர்களைப்படைக்கும்  பிறவியல்ல!, திருமாலாகி உலகம் காக்கும் பிறப்போ அல்ல! ஏனெனில் அவை இன்பம் தரக்கூடியபிறவிகள் எனினும் அவை வாரா வல்வினையை வருவிக்கும்.’ எனக்கூறி அப்பிறவிகளை ஒதுக்குகிறார். சரி வேறு எப்பிறவிதான் வேண்டும் என்றால்சிறந்த ஒழுக்கமும் கல்வியும் இல்லாதார் ஆயினும் உன் பொன்னார் திருவடிகளை வணங்குபவர்களாயின் அவர்கள்  திருவமுதுண்டு தெருவில் எறிந்த எச்சில் இலையைத்தின்று பிறவிக்கடலைக்கடக்கும் வரமுடைய நாயாக நான் பிறந்து உன்னருள் பெற்று வாழும் பிறப்பையே எனக்கருள்வாயாக!.’2.  என்று பாடுகிறார். இதற்குமேல் தன்னைத்தாழ்த்திப் பாட முடியுமா என்பது ஐயமே!
திருப்பாற்கடலான பொய்கை; மீனாட்சி அம்மைப்  பிள்ளைத்தமிழின் தாலப்பருவத்தில்தென்னவனாகிய பாண்டியன் வளர்த்த தமிழுடன் பிறந்த தென்றல் வீச, தீயரும்புவது போன்ற மாந்தளிர்களை உடைய இனியமாமரத்தின் நிழலில் கன்றினைப்பெற்ற எருமை உறங்குகின்றது.அது இன்னும் புல்கறிக்கக் கற்காத தன் கன்றினை நினைத்தது, அதனால் மடியில் பால் சுரந்து பொழிய அது அருவி போல்  ஓடி அலைகளையுடைய இனிய நீரையுடைய குளத்தில் கலந்தது. அத்தாமரைக்குளத்தில் நிலவு ஒளி வீசுகின்றது. பார்ப்பதற்கு அக்குளம் திருப்பாற்கடல் போல் காட்சியளிக்கிறது.தாமரைப்பூக்களில் திருப்பாற்கடலில் தோன்றிய திருமகளின் பொன்னிறம் போன்ற நிறமுடைய கால்களையும் தலைக்கொண்டையும் உடைய  அன்னப்பறவைகள் அமர்ந்திருக்கின்றன.’ என்கின்றார்.3. இதில் தீயரும்புவது போன்ற மாந்தளிர், திருப்பாற்கடல் போன்ற பொய்கை,  திருமகள் போன்ற அன்னம் ஆகிய உவமைகள் அதிசயவுவமைகள் ஆக அமைந்துள்ளன.
வாளை மீன் துள்ளுதல்; ‘மேகம் தன் கற்பம் உடைந்தது போல் மழை பொழிந்து தேவருலகின் கற்பகக்காட்டையும் செழிக்கச்செய்தது. மதுரையின் வயல்களில் உள்ள சினவாளை துள்ளிப்பாய்ந்து கங்கையின் நீண்ட கழிமுகங்களில் நீந்தி, அமுத ஒளிவீசும் நிலவின் முயல்கறையைத்தடவி, வானில் விண்மீன்களைத் திரட்டி உதறி, உலகை மூடியிருக்கின்ற முகட்டினைத்திறந்து,அப்பாலுள்ள கடலினைக்கலக்கி, அங்குள்ள சுறாமீன்களோடு விளையாடுகின்றது.’ .என்று மிகைப்படுத்திக்கூறுகிறார்.4.
மேகம் எருமையாதல்; ‘குன்று போன்ற இரு மார்புகளையுடைய மலர்க்கொடிபோன்ற இளம் மகளிரின் கூந்தலில் சூடியபூக்களில்  இளம்வண்டுகள் புகுந்து குடைய அதிலிருந்து கொட்டிய மலர்த்தாதுகள் கங்கை நதியைத் தூர்ந்து போகச் செய்கின்றன. மரச்சோலையில் ஆண்முயல்களின் மேல் துள்ளிவிளையாடுகின்ற ஆண்குரங்குகளின் ஒலிகளுக்கு அஞ்சி கார்மேகமானது நெல்வயல்களில் மேய்ந்து, மலைபோன்ற நெற்கதிர்ப்போரில் ஏறித்தங்க,அதனை எருமை எனக்கருதி வெண்மையான பற்களையுடைய மள்ளர்கள் சண்டையிடும் கொம்புகளையுடைய ஆண் எருமைகளோடு சேர்த்துப்பிணைத்து நெற்கதிர்களை மிதிக்க கடாவடித்தனர். அடிபட்ட மேகம் வலிதாங்காமல் இடிக்குரல் எழுப்பி ஓலமிட்டது.’  என்று கற்பனை செய்கிறார்.5. ஒரு பொருளை வேறுபொருளாக மாற்றி வியக்குமாறு கூறுவது திரிபு அதிசய அணி அல்லது மயக்க அணி என்பர். இங்கு மேகம் எருமையாக திரித்துக்கூறப்பட்டது.6.
                                                எளியமக்கள்பற்றியகற்பனை: நாட்டுப்புறங்களில் சிறுவர்,சிறுமியர் கூட்டாஞ்சோறு ஆக்கியுண்டு விளையாடுவது பழக்கமாகும். இதனைக்குமரகுருபரர் தன்கற்பனைத்திறனால் அழகாகக் கூறுகிறார். மயில் தோகைபோன்று காட்சியளிக்கும் முன்தானையாகிய ஆடையணிந்த வயல்வெளிமகளிர் மணல்வீடுகட்டி விளையாடுகின்றனர். அவ்வீடுகள் மிகச்சிறியதாக இருக்கும் ஆனால் அதில் அப்பெண்கள் குடிபுகுந்து சிறு சோறு ஆக்குகின்றனர் என்று மிகைப்படுத்திக்கூறுகின்றார். அவர்கள் சோறாக்கியவிதத்தைப்பின்வருமாறு கூறுகிறார்.
                         ‘வீட்டின் இருட்டைப்போக்கச்சுடர்விடும் மாணிக்கமணியின் ஒளியை விளக்காகப் பயன்படுத்தினர். அதனொளியையே அடுப்பெரிக்கும் நெருப்பாக்கினர். பவளக்கொடிகளை விறகாக்கினர். சங்கினைப்பாத்திரமாக்கி, தேனிலே முத்துக்களையிட்டுக் களைந்து, அத்தேனையே உலை நீராக்கி, முத்துக்களை அரிசியாகக்கொண்டு கூட்டாகச்சிறு சோறு ஆக்கிடும் குளிர்ந்த பண்ணை வயல்களையுடைய மதுரை’. என எளிய மக்களது விளையாட்டைக் கூட உயர்வாகச் சித்திரிக்கிறார்.7.
 ஆறுபோன்ற தெருக்கள்; ‘’ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்’’ என ஒற்றைவரியில் மாங்குடிமருதனார் மதுரைக்காஞ்சியில் கூறுவதனை,8. குமரகுருபரர் விரித்துக்கூறும் பாங்கினைக்காணலாம்.
            ‘ஊறுகின்ற மதநீரை முகந்து ஊற்றுகின்றது ஆண்யானை அந்த மதநீரோட்டத்தில் பெண்கள் தம் குழலைச்சீவுதலால் விழுகின்ற பூந்துகள்கள் படிந்து அடங்குகின்றன. குங்குமம் முதலான வாசனைப்பொடிகளும் அம்மதநீரோட்டத்தில் கலந்தன. அதனால் தெருக்கள் சேறாகின. சேறுவழுக்கியதால் வேகம் குறையும்படியாக அரசனின் பெருந்தேறும் ஒதுங்கும்படி பெரிய கொடுஞ்சிகளையுடைய நீண்ட தேர்களை சிவந்த கண்களையுடைய வேலேந்திய இளைஞர்கள் மிகவிரைவாக ஓட்டுகின்றனர்.அதனால் தேரில்பூட்டப்பட்ட குதிரைகளின் கடைவாய்வழியாக ஒழுகியோடும் குமிழியிட்ட நீர் மதநீருடன் சேர்ந்து ஓசையுடன் அலைகளாக நுரைத்து ஒரு பெரிய ஆறுபோல் தெருக்கள் காட்சியளிக்கின்றனஎன ஆற்றோட்டத்தைக் கண்முன் காட்டுகிறார்.9.
மன்மதன் வில்லும் மதுரைக்கரும்பும்;  மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் வருகைப்பருவத்தில் மதுரையில் கரும்பு வளர்ந்து காற்றிலாடி நிற்கும் காட்சியைமன்மதன் ரதியுடன் அளவில்லாத பல வடிவங்கள் எடுத்து போர்செய்யும் கரும்புவில் போல கரும்புகள் வான முகட்டைமுட்டி பூங்கொத்துகள் தலைவணங்கி நிற்கின்றனஎனக் கற்பிக்கிறார்.10.
கவரியாகும் கமுகம்பூக்கள்;வானில் ஐராவதம் என்ற யானை மீது செல்லும் இந்திராணிக்கு மதுரையின் உயரமான பாக்கு மரங்கள் தன் வெண்பூக்களால் வெண்கவரிவீசுகின்றன’-11. எனப்பாக்குமரத்தின் உயரத்தை உயர்த்திக்கூறுகிறார். சின்னச்சின்ன பொருளைக்கூட விடாமல் வியக்கும்படி வர்ணிக்கிறார் குமரகுருபரர்.
மீனாட்சியின் திக்விஜயம்; மீனாட்சியம்மையின் படைகள்   எல்லா நாடுகளையும் வென்று திக்குவிஜயம் மேற்கொண்ட போதுபூவுலகை மட்டுமின்றி  ஏழுலகங்களையும் ஒன்றாக அழித்து உலகைமூடும் அண்டச்சுவரையும் இடித்து புறத்தில் உள்ள கடலைக்குடித்துச் சேறாக்கின.’-12. என்று மிகுத்துக்கூறினார்.
விநாயகரின் விளையாட்டு; விநாயகரது சிறுபிள்ளை விளையாட்டினைக் கீழ்வருமாறு காணலாம்.’மீனாட்சியம்மையின் மார்புகளாகிய குடத்திலிருந்து கொட்டுகின்ற பாலினை அவளது மகனாகிய விநாயகர் அருந்தும்போது அவரது கடைவாயில் வழிந்தோடும் பால் அருவிபோல உள்ள நிலவொளி பொழியும் பூணிட்ட தந்தங்களால் மலைகளை இடித்தார். அதனால் அம்மலையிலிருந்த பொன்துகள்கள் குடத்தில் சிந்துரம் அணிவிப்பது போல விநாயகரது நெற்றியில் படிந்தன. ஏழுகடல்களையும் தனது தும்பிக்கையால் முகந்து வற்றியகடலைத் தன் மதநீரால் நிரப்பி வானில் தோன்றும் பிறைநிலவை யானையாகிய தன்னை அடக்க வந்த அங்குசப்படை எனக்கருதி வானமுகட்டில் அதனைத்தட்டிவிட்டு விண்மீன்கள் சூழ்ந்த மேகத்தைத் தன்முகபடாம் எனக்கருதி நெற்றியில் சுற்றுகின்ற களிறுஎன அதியுயர் கற்பனையாகக் கூறுகிறார்.13.
                     குமரகுருபரர் தமக்குரிய காலத்தின் மகாகவி எனலாம்.காலத்தின் சூழலால் சிற்றிலக்கியங்களைப் படைத்தார். வாய்ப்பு இருந்திருந்தால் அவர் மாகாவியங்களைப் படைத்திருக்க முடியும்.தமிழ் தாழ்வுற்ற அக்காலகட்டத்தில் தமிழ் அவரால் வளர்ச்சிபெற்றது எனலாம்.அவர் கற்பனையின் எல்லை தொட்ட கவிஞர் என அவரைக்கூறலாம்.
அடிக்குறிப்புகள்;
1. தண்டியடிகள்-தண்டியலங்கார நூற்பா-54.
2. குமரகுருபரர்-பண்டார மும்மணிக்கோவை-அடிகள்-19-43.
3 .குமரகுருபரர்-மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ்,தாலப்பருவம்,பாடல்-1.
4.   ‘’                            ‘’              ‘’       பாடல்-3.
5.   ‘’                           ‘’             ‘’      பாடல்-5.
6 .தண்டியடிகள்-தண்டியலங்கார நூற்பா-55.
7.குமரகுருபரர்-மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ்-தாலப்பருவம்,பாடல்-2.
8. மாங்குடிமருதனார்-மதுரைக்காஞ்சி, -அடி 359.
9. குமரகுருபரர்-மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ்,தாலப்பருவம்,பாடல்-4.
10.குமரகுருபரர்-மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ்,வருகைப்பருவம்-பா-2.
11. குமரகுருபர-மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ்,வருகைப்பருவம்-பா-5.
12. குமரகுருபரர்-மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
வருகைப்பருவம்-பா-3.
13. குமரகுருபரர்-மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ்,
 வருகைப்பருவம்-பா-4.


                               

Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

மாத்தாடு-பொருள் விளக்கம்

தத்துவ நோக்கில் பாரதி