தமிழ்மொழி,இலக்கியம்,கலை,பண்பாடு காத்தல் வழிகள்;

தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, கலை தக்கவைப்பு;
                            -முனைவர் ச.இரமேஷ்(கடம்பூரன்)
     ஒரு மனிதன் தன் தாய்மொழியை ஏன் பாதுகாக்க வேண்டும்? என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டால், ‘தன்னுடைய அடையாளத்திற்காக, தன்னுடைய முகவரிக்காக, தன்னுடைய பாதுகாப்பிற்காக’ என்று பதில் வருகிறது. தந்தை பெயர் தெரியாதவனை அநாதை என்கிறோம். மனிதன் ஒரு சமுதாய விலங்கு எனவே அவன் சேர்ந்துவாழ்வதில் பாதுகாப்பை உணர்கிறான். தன் பாதுகாப்பிற்கு என்று சிலர் வேண்டும் என நினைக்கிறான். அவன் தன்னைப்போன்ற பொருளாதாரம், தொழில் உடையவரோடு சாதியாக ஒன்று சேர்கிறான்,அதுவும் போதாதபோது பொது எதிரிக்கு எதிராக இனமாக ஒன்று சேர்கிறான். மொழியே ஒரு இனத்தின் அடையாளம்,முகவரி. எனவே ஒரு மனிதன் தன் அடையாளத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன் தாய்மொழியைக் காக்கவேண்டும்.
      இக்கட்டுரை, தமிழ்மொழி, அதன்இலக்கியம், அம்மொழிபேசும் மக்களின் பண்பாடு, அவர்களின் கலை ஆகியவற்றை எவ்வாறு அழியாமல் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுபற்றி ஆராய்கிறது.
                    
1.தமிழ்மொழித் தக்கவைப்பு;
  மொழிகள் சாகுமா? என்றால் மொழிகள் மட்டுமல்ல கடவுளர்களும் சாவார்கள். பல மொழிகளின் சாவில்தான் ஒரு பெருமொழி உருவாகிறது, பல கடவுளரின் சாவில்தான் ஒரு பெருமதம் உருவாகிறது. கிரேக்கர்களின் மொழியும் கடவுளரும் என்ன ஆனார்கள்? ஒன்று மற்றொன்றாய் அது வேறாய் மாற்றம் பெற்றது.
          ‘தமிழர்களாகிய சேரர்கள்தான் இன்று மலையாளிகளாய் வடமொழிக்கலப்பால் மாற்றம் பெற்றனர், கன்னடரும் தெலுங்கரும் தமிழராய் இருந்து வடமொழிக்கலப்பால் வேறாயினர். இது தமிழருக்குத்தோல்வியே ஆகும்.

          இஸ்ரேல் அழிந்த தன் மொழியைக் காப்பாற்றி புத்துயிர் அளித்திருக்கிறது,அமெரிக்க ஆங்கிலத்தால் இங்கிலாந்து ஆங்கிலம் கெடுகிறது என்று பிரிட்டிஷ் இளவரசர் நிதியொதுக்கி அமைப்பு ஒன்றைத்துவக்கி இருக்கிறார், இரஷ்யமொழி காக்க லெனின் போர் தொடுப்பேன் என்றார், இந்திய அரசு பலகோடி செலவில் சமஸ்கிருதமொழியை வளர்த்து வருகிறது.
         குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் தோன்றினர் என்றும் உலகின் முதல் மொழி தமிழே என்றும் அவர்கள் பலகாலகட்டங்களில் உலகம் முழுதும் பரவினர் என்றும் கோந்திரத்தாவ், எக்கெல், கா.அப்பாத்துரையார், தேவநேயப்பாவாணர் போன்றோர் கூறியுள்ளனர்.
சித்திய,மங்கோலிய,சீன மொழிகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகக் கால்டுவெல் கூறுகிறார்.
இந்தோ-ஐரோப்பிய மொழிகளும் தமிழும் உறவுடையவை என்கிறார் போப் அவர்கள்.அங்கேரி, துருக்கி,பின்னிசு போன்ற 11 பின்னோ உக்ரியன் மொழிகள் தமிழிலிருந்து பிறந்தன என்கிறார் கபோர் சென்த் கொதல்நய்.
சுமேரிய-தமிழ் உறவை லோகநாதமுத்தரையரும், எலாமைட்-தமிழ் உறவை மக் ஆல்பினும், கொரியன்-தமிழ் உறவை ஆல்பர்ட்டும், ஆப்பிரிக்க-தமிழ் உறவை செங்கோர் அவர்களும் வலியுறுத்துகின்றனர். சப்பானிய மொழிக்குத் தமிழே மூலம் என்கிறார் முனைவர் சுசுமு ஓனோ, ஆஸ்த்திரேலியப் பழங்குடிகளின் மொழி தமிழிலிருந்து தோன்றி இருக்கவேண்டும் என்பார் பிரிச்சார்டு. அமெரிக்கப் பழங்குடிகளின் மொழி தமிழோடு தொடர்புடையது என்கிறார் சமன்லால்.
தமிழன் போன போன இடத்திலெல்லாம் தமிழைத்தொலைத்தான், தமிழனாக நிலைத்து நிற்காமல் பிற இனமாகப்பிரிந்தான்’ என இவை போன்ற செய்திகளைக் கவிஞர் காசி ஆனந்தனின் ‘’தமிழனா? தமிங்கிலனா?’’ என்ற நூல் வழி அறிகிறோம். அமெரிக்க மொழியியல் அறிஞர் நோம்சாம்ஸ்கி, ‘’உலகமொழிகள் எல்லாம் இரண்டு மொழிகளில் இருந்து பிறந்தன, அவற்றில் தமிழ் முதல் இடத்தில் உள்ளது.’’ என்று கூறுகிறார்.
எனவே தமிழர்கள் விழிப்புடன் இருந்து தமிழ்மொழியைக் காக்கவேண்டும்.

                      தமிழ் காக்கச் சிலவழிகள்;
 
   1.1. ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துப்பாடங்களும் தமிழ் வழியில் கற்பிக்கப்படவேண்டும். வாரணாசி பல்கலைக்கழகத்தில் மருத்துவப்பாடம் கூட சமஸ்கிருதமயமான இந்தி மாணவர்களுக்குப் புரியாத காரணத்தால் மக்கள் மொழியான போஜ்பூரிமொழியிலும் பிற மக்கள் மொழியிலும் நடத்தப் படுகின்றன,(திஇந்து, தமிழ்-நாளிதழ், 21.02.2015, ’இந்திவாழ்க’-ஆழிசெந்தில்நாதன்,கட்டுரை).
   1.2.  அரசுசார் நிறுவனங்களில் அனைத்துப் பணிகளும் தமிழ்வழியாக நடைபெறவேண்டும். கோப்புகள், விளம்பரங்கள், செயல்திட்டங்கள், கணினிச்செயல்பாடுகள் அனைத்தும் தமிழில் நிகழவேண்டும். உருவாக்கப்பட்ட கலைச்சொல் அகராதிகளை ஊழியர்களுக்குக் கற்பிக்கவேண்டும், பயிற்சிவழங்கவேண்டும்.
     1.3. தனியார்துறை சார் கல்விநிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். குறிப்பாக ஆங்கிலப்பள்ளிகளில் தமிழ்மொழிப்பாடங்கள் கூட நடத்தப்படுவதே இல்லை. இதைக் கண்டிக்கவேண்டும். கலைக்கல்லூரிகளில்  தமிழ்த்துறைகளே இல்லை வெறும் மொழிப்பாடம் (part-1) மட்டுமே நடத்தப்படுகின்றன. பொறியியல் கல்லூரிகளில் குறைந்த பட்சம் தமிழ் மொழிப்பாடமாவது கற்பிக்கப்படவேண்டும். கர்நாடகாவில் கன்னடம் படிக்காமல் பட்டம் பெறவியலாது என்ற நிலையுள்ளது. தமிழ்நாட்டிலும் அந்த நிலைவரவேண்டும்.
    1.4. மக்கள்தம் அன்றாடப் பேச்சு மற்றும் எழுத்தில் தமிழைப்பயன்படுத்த வேண்டும். தமிழில்பேசுவது உயர்வானது என்ற எண்ணத்தை உண்டாக்கவேண்டும். அதற்குக் கல்விகற்றவர்கள் முதலில் தமிழில் பேசவேண்டும். மொழி சிதைக்கும் ஊடகங்களை அரசு கட்டுப்படுத்தவேண்டும். அரசு மட்டுமின்றிப் பொதுமக்கள் குறிப்பாகத் தமிழ் ஆர்வலர்கள் மட்டுமாவது தமிழ்க்கொலைபுரிகின்ற நாளிதழ்கள், மாத இதழ்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு கடிதம் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ எச்சரிக்கை செய்யவேண்டும். தவறுகளை எடுத்துச்சொல்லவேண்டும். இதனை நாம் செய்யவேண்டும். நம்மால் செய்யமுடியும். உண்மையில் மக்களின் எதிர்ப்பை அந்த நிறுவனங்கள் அலட்சியம் செய்யாது. ஆங்கிலப் பத்திரிக்கைகளில் எழுத்துப் பிழைகளைக்கூட கடிதங்கள் மூலம் மக்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
  1.5. அயலகத்தமிழர்கள் அன்றாடம் பல சிக்கல்களுக்கு இடையே வாழ்கின்றனர் இருந்தும்கூட போற்றத்தக்க தமிழ்ப்பணிகளைச் செய்துவருகின்றனர்.எனினும் அயல் சூழலில் வருங்காலத்தலைமுறை  தமிழைப்பயன்படுத்துவார்களா என்பது ஐயமே,எனினும் தாய்மொழி குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு உருவாக்கவேண்டும். தமிழ்ப்பள்ளிகள் செயல்படவேண்டும். குறிப்பாக இலண்டனில் வாழும் ஐந்தாம் தலைமுறை குஜராத்திகள் இந்தியில் அல்லாமல் தங்கள் தாய்மொழியிலேயே பேசிவருகின்றனர். இலண்டனில் வசிக்கும்  தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கின்றனர் ஆனால் ஆனால் சீனர்கள் தங்களுக்குள் சீனமொழியிலேயே பேசுகின்றனர் என்பது போற்றத்தக்கது. அதனைத்தமிழர்களும் பின்பற்றவேண்டும். இதுகுறித்து புலம்பெயர் நாடுகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன.  (http://www.yarl.com /forum3/index.php?/topic/148653.).
                    2.இலக்கியத் தக்கவைப்பு;
          ஈராயிரம் ஆண்டு கால இலக்கிய வரலாறுடைய தமிழ்மொழி தமிழர்களின் பற்றின்மையாலும் மூடநம்பிக்கைகளாலும் பல இலக்கியங்களை இழந்துள்ளது. தருமபுரம் ஆதீனப் பணியாளர்கள், பழைய ஓலைச்சுவடிகள் இருந்தால் பீடை என்று கருதி ஆடிப்பெருக்கு வெள்ளத்தில் கொட்டியதுபோக மீதம் இருந்ததை  காவிரியாற்றில் இடச்சென்றபோது தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் தடுத்தாட்கொண்டு சிலப்பதிகாரம் காத்த கதை உலகம் அறியும். அறிவிற் சிறந்த தருமபுரம் ஆதீனத்திலேயே இந்தநிலை என்றால் எளியமக்கள் எவ்வளவு அழித்திருப்பார்கள்? அடியார்க்கு நல்லார் உரையை மேற்கோள் காட்டி அழிந்து போன தமிழ் நூல்கள் என ஒரு பட்டியலையே மயிலை சீனி வேங்கடசாமி தருகிறார்.  பல லட்சம் நூல்கள், ஓலைச்சுவடிகள் யாழ்ப்பாண நூல்நிலையத்தில் கொளுத்தப்பட்டன. அரிய இலக்கியங்கள் எவ்வளவு அழிந்தன என்று யாருக்கும் தெரியாது. ஆனால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழ் இலக்கியங்களை மின்மயமாக்கிக் காத்துவருகின்றனர். தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிபீடியா போன்ற அமைப்புகளில் தமிழ்க்கட்டுரைகள் ஏற்றப்படுகின்றன. மதுரைத்திட்டம் (PROJECT MADURAI) என்ற அமைப்பு மிகப்பெரிய இலக்கியக்காப்பைச் செய்துவருகிறது. சங்க இலக்கியங்கள் முதல்,இக்கால உரைநடைநூல்கள், மொழிபெயர்ப்புநூல்கள் வரை எல்லாவற்றையும் மின்மயமாக்கி மதுரைத்திட்டம் சேமித்துவருகிறது. ‘’அழியாச்சுடர்கள்’’ என்ற வலைத்தளம் தமிழின் நவின இலக்கியங்களான நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் போன்றவற்றைப் பதிவேற்றம் செய்து காத்துவருகின்றது. கீற்று, திண்ணை போன்ற வலைத்தளங்கள், எண்ணற்ற ஈழத்தமிழ் இலக்கிய வலைத்தளங்கள், எழுத்தாளர்களின் வலைத்தளங்கள்  போன்றவை தமிழ் இலக்கியச்சேவை செய்துவருகின்றன. இவ்விலக்கியங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு காக்கப்படவேண்டும்.
இலக்கியம் காக்கச் சிலவழிகள்;
2.1 உலகெங்கும் தமிழர்கள் இலக்கியம் படைத்தாலும் அவை   ஓரிடத்தில் சேமித்து வைக்கப்படவில்லை. அது பாதுகாப்பில்லை. சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை உரைநடை நூல்கள் முழுவதும் ஒரே அமைப்பில் பாதுகாக்கப்படவேண்டும். இதனைத் தனிமனிதன் செய்ய இயலாது, தமிழக அரசுதான் இதனைச்செய்யவேண்டும். உலகெங்கும் படைக்கப்படும் இலக்கியங்கள் உடனடியாக இந்தத் தமிழக அரசின் அமைப்பிற்கு அனுப்பப் படவேண்டும். அவை மின் வடிவில் இருப்பது நலம்பயக்கும். அப்பொழுதுதான் பாதுகாக்கவும் படியெடுக்கவும் இயலும். ஆய்வாளர்களுக்கும் இது பேருதவிபுரியும்.
2.2 மறுபதிப்புவராத பழைய, சிறந்த நூல்கள் அனைத்தும் மின்மயமாக்கம் செய்யப்பட வேண்டும். நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் மேற்கண்ட  தமிழக அரசின் அமைப்பில் இருக்கவேண்டும்.
   2.3 இலக்கியத்திருட்டு தடுக்கப்படவேண்டும். தமிழ் இலக்கியம் என்ற பெயரில் மொழிக்கலப்பாக எழுதப்படும் தமிழ்ச்சிதைவு இலக்கியங்கள் ஒரு சிறந்த அறிஞர்கள் குழுவால் தடை அல்லது தணிக்கை செய்யப்படவேண்டும்.
   2.4 உலக அளவில் புகழ்பெற்ற நூல்கள் தமிழாக்கம் செய்யப்படவேண்டும். இது தமிழ் வளர்சிக்கும், இலக்கியவளர்ச்சிக்கும் உதவும். அப்பொழுதுதான் காலத்திற்கு ஏற்பத் தமிழ் இலக்கியங்களும் செழுமைபெறும், நிலைத்துநிற்கும்.
   2.5  இன்னும் நூலாக்கம் செய்யப்படாத ஓலைச்சுவடிகள்  ஏராளமாக உள்ளன. அவை தமிழக அரசின் மேற்கூறிய அமைப்பில் ஒன்று சேர்க்கப்பட்டு மின்வடிவாக்கம் பெறவேண்டும்.
                   
                3. பண்பாட்டுத்தக்கவைப்பு;
‘’பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்’’- எனக் கலித்தொகை கூறுகிறது. அதாவது பண்பு என்பது சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளுதல் என்பதாகும். இந்தப் பண்பட்ட நிலைதான் எல்லாவற்றிலும் அமைந்து, சிறந்து பண்பாடு ஆகிறது. இதைத்தான்,
"மனிதனின் அகநல ஆக்கமாக விளங்கும் அன்பு -  அறிவு -  ஆற்றல் - இன்பம் -  இயல்பு - உணர்ச்சி -  எழிற்சி -  வீரம் - தீரம் -  ஈவு -  இரக்கம் -  அமைதி -  அடக்கம் - ஒப்புரவு - ஒழுக்கம் -  உண்மை - ஊக்கம் -  சினம் - சீற்றம் போன்றவற்றின் மேன்மையையும் உயர்வையும் உணர்த்துவது பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.|| (பைந்தமிழர் போற்றிய பண்பாடுகள் - இரா.நெடுஞ்செழியன்.) என்பர். ஆனால் நாகரிகம் என்பது பற்றி சங்ககாலத்தில் வேறு பொருள் வழங்கியது.
‘’முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
  நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்’’
என்று சங்க இலக்கியம் கூறுகிறது. இதன் மையக்கருத்து மனப்பக்குவமே நாகரீகம் என்பதாக இருக்கிறது ஆனால் இக்காலத்தில்  நாகரிகம் என்பது புறம் சார்ந்ததாக மாறியுள்ளது. இதனைக்கீழ்வரும்
விளக்கத்தால் உணரலாம்.
"மனிதனின் புறநல ஆக்கமாக விளங்கும் உணவு – உடை - உறையுள் - ஊர்தி - நிலம் -  புலம் -  தோட்டம் - துரவு – கழனி – காடு – அணி – மணி – மாடமாளிகை - கூடகோபுரம் – எழிலுடல்.- ஏற்றநிலை போன்றவற்றின் சிறப்பையும் செம்மையையும் உணர்த்துவது நாகரிகம்.|, .|| (பைந்தமிழர் போற்றிய பண்பாடுகள் - இரா.நெடுஞ்செழியன்.)
இதனைப் புறமேம்பாடு  எனலாம்.  நாகரீகம் நாட்டிற்கு நாடு மாற்றத்திற்குரியது. நாகரிகத்தில் சில பண்பாட்டு அடையாளமாகவும் திகழும். ஆனால் பண்பாடு காக்கப்படவேண்டும்.
  ‘’தமிழர் என்றோர் இனமுண்டு,
   தனியே அவர்க்கோர் குணமுண்டு,
   மானம் பெரிதென உயிர்விடுவான்,
   மற்றவர்க்காகத் துயர்படுவான்’’
என நாமக்கல் கவிஞர் கூறியது பண்பாட்டையே ஆகும். மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்பவும் நுகர்வுக் கலாச்சாரத்தாலும் புதிய பொருளாதாரக் கொள்கைகளாலும் மனித விழுமியங்கள், பண்பாடு ஆகியவை கேள்விக்குள்ளாகின்றன. எனவே பண்பாட்டுத் தக்கவைப்பு மிக ஆவசியமாகிறது.
       
பண்பாட்டுத் தக்கவைப்பிற்குச் சிலவழிமுறைகள்;
3.1 பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நன்னடத்தை வகுப்புகள் (நீதிபோதனை) மீண்டும் நடத்தப்படவேண்டும். கல்வியால் மட்டுமே நிலையான பண்பாட்டுப் பாதுகாப்பை உருவாக்க இயலும். 
3.2 பெற்றோர், மூத்தோர் குழந்தைகளுக்கு நீதிக்கதைகளையும் நல் ஒழுக்கங்களையும் கற்பிக்கவேண்டும். நல்ல ஒழுக்கத்தால் விளையும் நன்மைகளையும் தீய ஒழுக்கத்தால் விளையும் தீமைகளையும்  எடுத்துச் சொல்லவேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது எனவே சிறுபருவத்திலேயே பண்பாடு போதிக்கப்படவேண்டும்.
3.3 சினிமா, தொலைகாட்சி, நாள், வார, மாத இதழ்கள்  ஆகியவை பண்பாட்டினைக் காப்பாற்ற வேண்டும். அவற்றைக் கண்காணிக்க வேண்டும். இணையம், கைபேசி போன்றவற்றால் பிள்ளைகள் கெட்டுவிடாமல் கண்காணிக்கவேண்டும்.
3.4 உடைகள், விழாக்கள், அறிவுசார் சடங்குகள் ஆகியவற்றையும் பண்பாட்டு அடையாளங்களாகக் கொள்ளவேண்டும். வேட்டி கட்டுவது தமிழரின் அடையாளமாகும். நீதிபதி ஒருவருக்கே வேட்டி கட்டத்தடை இருந்ததை எண்ணிப்பார்க்கவேண்டும். எனவே வேட்டி, புடவை போன்ற எளிய பண்பாட்டு அடையளங்களை விழாக்காலங்களிலாவது பின்பற்றவேண்டும்.
3.5 பெரியோரை மதித்தல், விருந்தோம்புதல், நன்றிபாராட்டல், நல்ல எண்ணங்களை வளர்த்தல், நல்ல சொற்களைப்பேசுதல், நல்ல நடத்தையுடன் செயல்படுதல் ஆகியவற்றை இன்றியமையாப் பண்புகளாக தமிழர்கள் வளத்துக்கொள்ளவேண்டும். அறத்துடன் பொருள் ஈட்டி, அறம் செய்து, அறத்துடன் இன்பம் துய்த்தலே தமிழர் பண்பாடாகும்.
                    
                 4. கலைத்தக்கவைப்பு;
   கலை என்பதற்குப் பிரிவு என்று பொருள். மனிதனின் அழகியல் உணர்வும் அதன் வெளிப்பாடுகளுமே கலைகள் எனலாம். மனிதனின் உணர்வுகளுக்கு ஒருவடிகாலாகவும் கலை அமைகிறது. ஒரு இனம் அதன் கலைச்செல்வங்களை வைத்து மதிக்கப்படுகிறது. உலகின் முதல் மொழியாகவும் பல்லாயிரம் ஆண்டுகள் கடலால் சூழப்பட்டு வெளி உலகத்தொடர்புகள் இன்றிப் பாதுகாப்பாக வளர்ந்த, இந்தத்தமிழ் மொழி இயற்கைமொழியாக, பிறமொழிக்கலப்பு இன்றித் தூயதமிழாக விளங்கியது, அதன் கலைகளும் தமிழர்களின் இயற்கைக் கலைகளாக இருந்தன. இசைக்கலை, நாட்டியக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகியவை தமிழரிடம் இயல்பாக தனித்தன்மையோடு வளர்ந்தன.
        இவற்றில் பிற்காலத்தில்தான் மொழிக்கலப்பு ஏற்பட்டது. பிறகலைகளின் கலப்பினால் கலைவளரும் ஆனால் அதுதன் தனித் தன்மையை இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். பிறமொழி எழுத்துகள், ஓசைகள் கலந்தால்  மொழியே அழிந்துவிடும். அது வேறு ஒரு மொழியாகக் காட்சியளிக்கும். ஒரு பசுவின் மேல் இலட்சக் கணக்காண ஒட்டுண்ணிகள் ஒட்டி பசுவின் குருதியைக் குடித்தால் காலப்போக்கில் பார்ப்போர் கண்ணுக்குப் பசு தெரியாது, ஒட்டுண்ணிகள்தான் தெரியும். அது போலவே தமிழர்தம் கலைகள் இன்று பிறர்தம் கலைகளாகக் களவுபோய்க்கொண்டு இருக்கின்றன என்றே கூறவேண்டும்.
   அ) இசைக்கலை; தொல் தமிழரின் கலைகளில் இசைக்கலை குறிப்பிடத்தக்க ஒன்று.
              தமிழ் இசை, கூத்து (நாட்டியம்) ஆகியவற்றின் தோற்றமாகப் பாரதிதாசன் தன் அழகின் சிரிப்பு நூலில்,
                   ‘’பழந்தமிழ் மக்கள் அந்நாள்
                       பறவைகள், விலங்கு, வண்டு,
                    தழை,மூங்கில் இசைத்ததைத் தாம்
                        தழுவியே இசைத்ததாலே
                    எழும் இசைத்தமிழே! இன்பம்
                         எய்தியே குதித்ததாலே
                    விழியூண்ணப்பிறந்த கூத்துத்
                         தமிழே! என் வியப்பின் வைப்பே!.’’
என்று கூறுவது போற்றத்தக்கது. கி.மு வில் தோன்றிய தொல்காப்பியத்தில் வண்ணம், பண்கள் ஆகியவற்றைக்கூறுகிறார், வெண்பா-செப்பலோசை, ஆசிரியப்பா-அகவல் ஓசை, கலிப்பா-துள்ளல்இசை, வஞ்சிப்பா-தூங்கல்ஓசை. எனத்தமிழில் வரையறுக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் பரிபாடல், பதிற்றுப்பத்து அகிய நூல்களில் பாடல்களின் கீழ் இசைப்பண்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஆற்றுப்படை நூல்கள் இசைத்துறை சார்ந்த பாணர்கள்,கூத்தர்கள் போன்றோர் பற்றி விரிவாகக் கூறுகின்றன. பிற்கால கி.பி 6- ஆம் நூற்றாண்டு தேவாரப்பதிகங்களில் தமிழ்ப்பண்கள் குறிக்கப்பட்டுள்ளன.
       பிற்காலத்தில் முத்துத்தாண்டவர் (கி.பி-14 ஆம் நூற்றாண்டு) , சீர்காழி அருணாலக்கவிராயர் (கி.பி-18 ஆம் நூற்றாண்டு), மாரிமுத்தாப்பிள்ளை (கி.பி-18 ஆம் நூற்றாண்டு) ஆகியோர் தமிழிசையில் தமிழ்ப்பாடல்களைப் பாடியுள்ளனர்.
      ஆனால் இப்படிப்பட்ட பழமை மிகுந்த தமிழ் இசையை இன்று கர்நாடக இசை என்று குழப்பியுள்ளனர். இதன்மூலம் தமிழ் இசை என்பது மறைக்கப்பட்டு பிற இனத்தாரின் இசையாக இது காட்டப்படுகிறது. 16 ஆம் சூற்றாண்டு முதல் ஆங்கிலேயர்கள் காலம் வரை தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி சார்ந்த விசயநகர அரசின் ஆட்சி ஏற்பட்டது. அக்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டுப் பிராமணர்கள், தெலுங்குப்பிராமணர்கள் ஆகியோர் ஒன்று கலந்தனர். கல்வி கற்ற இனமாகிய அவர்கள் தமிழ் இசையில் தெலுங்குப் பாடல்களைப்பாடினர், கீர்த்தனைகள் பாடினர். இவர்களில்  சியாமா சாத்திரி(கி.பி-18), தியாகராசர்(கி.பி-18), முத்துசாமி தீச்சிதர்(கி.பி-18) ஆகிய இம்மூவரும் தமிழர்களின் நாட்டுப்புற இசையில் தெலுங்குப் பாடல்களைப்பாடினர். இவர்களைக் கர்நாடக இசை மும்மூர்த்திகள் என்றும் இவர்கள் பாடிய பாடல்களை கர்நாடக சங்கீதம் என்றும் கதை பரப்பினர். இதனால் தமிழிசை என்பதும் தமிழிசையின் தொன்மையும் மறைக்கப்பட்டது. தமிழ் இசையானது கர்நாடக இசையாக மாற்றப்பட்டது.
      ஆங்கில விக்கிப்பீடியா போன்ற ஊடகங்களில் எல்லோரும் தமிழிசை என்பதை மறைத்து இந்திய இசை என்று எழுதுகிறார்கள், இது கண்டிக்கத்தக்கது, தண்டிக்கத்தக்கது.  எப்பாடு பட்டாவது தமிழ் இசையைக் காக்கவேண்டும். இந்துஸ்தானி இசையின் மூலம் தமிழே என்ற கோமதி ஐயரின் கூற்றைக் கா. கோ. வேங்கடராமன் (தமிழிலக்கியவரலாறு) மேற்கோள் காட்டுகிறார் என்பது எண்ணத்தக்கது.
        ஆ) நாட்டியக்கலை; நாட்டின் அகம் நாடகம் அதாவது நாட்டில் நடப்பதை நடித்துக்காட்டுவது. இதுவே நாட்டியக்கலை ஆனது. ஒரு குச்சியை நேராக நிறுத்துவதை நட்டுவைத்தல் என்கிறோம். நம் உடலை நேராக நிறுத்தவும் இடம் பெயரவும் உதவுவதைக் கால் என்கிறோம், ஏன் எனில் நம் உடலின் கால்பாகம் கால்கள்தான். கால்களால் நடப்பதைக் கால்நடை என்கிறோம். நடைப்பயிற்சி, கால்நடையாக போன்ற சொற்களும் நாட்டியக்கலை தமிழ்க்கலை என்பதை உணர்த்தும், நாட்டியக்கலையின் தெய்வமாக நடராசரை நாம் கூறுகிறோம், நடராசவழிபாடு தமிழ்நாட்டில்தான் தோன்றியது. பழைய நடராசர்சிலையும் தமிழ்நாட்டில்தான் உருப்பெற்றது. இவையெல்லாம் நாட்டியக்கலையின் வேர் தமிழ் என்பதும் அது தமிழரது கலை என்பதும் புலனாகிறது.
      ஆனால் நாட்டியக்கலையை பரதக்கலை என்றும் அதை உருவாக்கியவர் பரதமுனிவர் என்றும் அவர் அதற்காக நாட்யசாஸ்திரம் என்ற நூலை எழுதினார் எனத்தமிழரின் நாட்டியக்கலையை பரதசாத்திரத்தோடு இணைத்து ஏமாற்றுகின்றனர், ஆரியர்களின் நடனக்கலையை ஆரியக்கூத்து என்பர். தமிழ்நாட்டிலும் வேத்தியல்,பொதுவியல் என இருபிரிவுகள் இருந்தன.வேந்தன் சார்ந்தது வேத்தியல்,மக்கள் சார்ந்தது பொதுவியல். ஆரியக்கூத்து பற்றித் தமிழ் இலக்கியம் பேசுகிறது. நாட்டியக்கலை பற்றி பரதமுனிவர் நூல் எழுதியிருக்கலாம். ஆனால் அதனைத் தமிழரின் நாட்டியக்கலையோடு இணைத்துக் குழப்பும் வேலையைவிடவேண்டும். குறிப்பாக நாட்டியத்தில் (பரதநாட்டியம் என அழைக்கப்படும்) முனைவர் பட்டம் பெற்ற பத்மாசுப்பிரமணியம் அவர்கள் கூட நாட்டியக்கலை காஷ்மீரில் பிறந்ததாகக் கூறுகிறார். அப்படியானால் பரதநாட்டியம் ஏன் இந்தியா முழுவதும்  இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது? நடராசர் வழிபாடு தமிழ்நாட்டில் மட்டும் இருப்பது ஏன்? நாட்டியம் என்ற சொல் தமிழாக இருப்பது ஏன்?
   தமிழர்களுடைய கலைகளை எல்லாம் ஆரியக்கலைகள் என்றும் தமிழர்கள் அனைவரையும் வட இந்திய முனிவர்களின் வழிவந்தவர்கள் என்றும் தமிழ்நாட்டு மரத்தச்சர்களை, பொற்கொல்லர்களை, வீடுகட்டும் கொத்தர்களை விஷ்வகர்மா வழிவந்தவர்கள் என்றும் முல்லைநில மக்களாகிய கோனார்களை யாதவர்கள் என்றும் தமிழ்நாட்டின் அரசர்களைக் குறிப்பாகச் சோழர்களை சூரியவம்சம், பாண்டியர்களை சந்திரவம்சம் என்றும் வன்னியர்களை ஷத்திரியர்கள்-சம்புமகரிஷி வழிவந்தவர்கள் என்றும் கூறி தமிழர் அல்லாதார் போல் காட்டப்படுவது தடுக்கப்படவேண்டும்.வடகலையும் தென்கலையும் கொண்டும் கொடுத்தும் வந்துள்ளன,ஆனால்தமிழில் எதுவுமில்லை எனக்காட்டமுற்படுவது தவறு.மேலும் வடகலையை இங்குக் குறைத்துக்கூற முயலவில்லை என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.
கலைத்தக்கவைப்பு சிலவழிமுறைகள்;
4.1 தமிழ்நாட்டிலும் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழ் இசைப்பள்ளிகளும், தமிழ்நாட்டியப்பள்ளிகளும் உருவாக்கப்பட வேண்டும், அவற்றில் தமிழ்ப்படல்கள் மட்டுமே ஒலிக்கவேண்டும். தமிழ் வழிக்கல்வி நடைபெறவேண்டும்.
4.2 தமிழ் நாட்டில் தொலைக்காட்சிகள், வானொலிகள் மன்றங்கள் ஆகியவற்றில் தமிழ் இசைப்படல்களே பாடப்படவேண்டும். தெலுங்குப் பாடல்களை ஆந்திராவில் பாடலாம். இசைக்கு மொழியில்லை என்றுகூறித் தமிழ்ப்பாடல்களைப் பாட மறுக்கின்றனர். ஆனால் தமிழ்மொழிக்கு ஒரு இசை இல்லையா? கூடாதா? வேண்டாமா?
4.3  தமிழ் இசை பற்றியும், நாட்டியக்கலை பற்றியும் ஆங்கிலம் மட்டுமல்லாது இந்தியமொழிகளிலும் குறிப்பிட்ட சில உலக மொழிகளிலும் கட்டுரைகள் எழுதப்படவேண்டும். விக்கிப்பீடியா போன்ற பொது ஊடகங்களிலும் உண்மைகளை எடுத்துரைக்கவேண்டும்.
4.4  உலகெங்கும் பரவிவாழும் தமிழர்கள் சொல்ல இயலாத பல துன்பங்களுக்கு இடையிலும் தமிழுக்குத் தொண்டு செய்து வருகின்றனர். அவர்கள் தாம் வாழும் நாடுகளின் மொழியைப்படித்து அந்தந்த மொழிகளில் எழுத்தாளர்களாக வேண்டும். தமிழர் கலையைப் பரப்பவேண்டும்.
4.5   பெற்றொர் தம்பிள்ளைகளுக்குத் தமிழ் இசையையும், தமிழ் நாட்டியத்தையும் (பரதக்கலைஎனப்படும்) சிறுவயதிலேயே கற்பிக்கவேண்டும்.
4.6    தமிழரின் கலை வேர்கள் ஆராயப்படவேண்டும். உலகத்தமிழறிஞர்கள் அடிக்கடிக்கூடி ஆராய்ச்சி செய்யவேண்டும். உலகத்தமிழறிஞர்களுக்கான ஒரு பொது அமைப்பு உருவாக வேண்டும் அது சாதி, மதம், மொழி, இனம், ஏன் நாடு கடந்ததாக அமையவேண்டும். ஜப்பானிய-தமிழ் மொழி அறிஞர்கள் முனைவர் சுசுமு ஓனோ, நொபுரு கராஷிமா, பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலா, அமெரிக்கக்கலிபொர்னியா பல்கலையின் தமிழ்ப் பீடத்தலைவர் ஜியார்ஜ் எல் ஹார்ட் போன்றோர் அயல்மொழி, அயல் இன,அயல்நாட்டு அறிஞர்கள்தானே! தமிழாய்வு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அமைப்புக்குள் வரவேண்டும்.
ஒட்டுமொத்தமாகக் கூறவேண்டுமானால் பள்ளிக்கூடம்,வீடு இவற்றைச்சரியாக வைத்தாலே தமிழ்மொழி, தமிழ்இலக்கியம், தமிழ்ப்பண்பாடு, தமிழ்க்கலை ஆகியவற்றைக் காக்கமுடியும்.
       உலக அளவிலான தமிழ்ப்படைப்புகளும் தமிழ் அறிஞர்களும் ஓர் அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கப் படவேண்டும்.

Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

மாத்தாடு-பொருள் விளக்கம்

தத்துவ நோக்கில் பாரதி