தத்துவ நோக்கில் பாரதி
தத்துவ
நோக்கில்
பாரதி -முனைவர் ச.இரமேஷ்.
‘தத்’ என்ற உபநிடத மகாவாக்கியத்திற்கு ‘அது’-அப்பரம்பொருள் என்று பெயர். தத்துவம் என்றால் இறைவனைப்பற்றிய உண்மை எனப்பொருள் கொள்ளலாம்.பாரதி காசியில் கல்வி பயின்றவர்.ஆகையால் வேத வேதாந்தங்களில் மெய்யுணர்வு பெற்றிருந்தார். அவரது வாழ்வும் வாக்கும் இதை மெய்ப்பிக்கக் காணலாம்.அவரது பாடல்களில் அனைத்து மதங்களையும் ஏற்று ஒரு பொதுப்பார்வை கொண்டிருந்தாலும் அவர் ஒரு அத்வைதியாக விளங்கினார்.பாரதியை விளங்கிக்கொள்ளச் சில தத்துவ விளக்கங்களை அறிந்து பின்னர் பாரதியின் பாடல்கள் வழி அவரது தத்துவ நோக்கை ஆராய்கிறது இக்கட்டுரை.
வேதாந்தம்; வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் முடிந்த முடிபான அறிவு என்று பொருள். இது பலவாகப் பிரிந்துள்ளது. அவற்றைப் பின்வருமாறு காணலாம். ‘த்வைதம்’- என்றால் இரண்டு என்று பொருள். அதாவது இறை,உயிர்கள் ஆகியவை வேறு வேறானவை.ஒன்றல்ல என்பதே த்வைத தத்துவமாகும். ‘அத்வைதம்’-என்பது இரண்டு அற்றது அதாவது இறையும் உயிர்களும் ஒன்றே! இரண்டு அல்ல என்பதாகும்.’விசிஷ்டாத்வைதம்’-என்பது அத்வைதத்தை ஏற்கிறது ஆனால் பரம்பொருளும் ஒரு விலங்கும் ஒன்றுதான் ஆனால் சமமல்ல. பராமாத்மாவின் ஓர் அம்சமே விலங்கு என்கிறது. ஆகிய புரிதல்களோடு பாரதியை அணுகலாம்.
உலகும் நானும் வேறல்ல! காக்கை,குருவி,கடல்,மலை,எட்டுத்திசைகள், இவையனைத்தும் நானே!வேறு எதுவும் இல்லை என்கிறார் பாரதியார்.
‘’ காக்கைக்குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை!’’1.
பரம்பொருள், ஆன்மா, ஜடப்பொருள் அனைத்தும் ஒன்றே! என்னும் இந்நிலையைத்தான் அத்வைத நிலை என்கிறோம்.இதனையே பாரதி,
‘’உள்ளுயிராகி உலகம் காக்கும் சக்தியே!’’-2
‘’சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு
சேருமைம்பூதத்து வியனுலகமைத்தாய்’’-3
என்றியம்புகிறார்.சித்து என்பது அறிவு அசித்து என்பது அறிவற்ற பொருள் முதலியன. இரண்டும் ஒன்று சேர்ந்ததால் காக்கையும் குருவியும் நம் சாதியானது கடலும் மலையும் நம் கூட்டமானது.இதே கருத்தை இன்னும் விரிவாக பாரதியின் ‘நான்’ என்ற பின் வரும் பாடல் விளக்குகிறது.
‘’வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்’’-4
என்ற
இப்பாடலில் அனைத்திலும் ஆன்மா கலந்துள்ளதைக்கூறினார்.
உலகும் கடவுளும் வேறல்ல!; எல்லாப் பொருளிலும் இறைமை கலந்துள்ளது என்பதை,’காக்கையின் கருமை, மரத்தின் பசுமை, கேட்கும் ஒலி, தீயின் சூடு! அனைத்திலும் கண்ணன் இருப்பதைக்கண்டேன் எனக்கூறுகிறார்.5.
‘’பகை நடுவினில் அன்புறுவான நம் பரமன் வாழ்கின்றான்’’6.பாரதியின் உள்ளத்தில் அத்வைதம் நீங்கா இடம் பெற்றிருந்தது. அதனால்தான் தன் வசன கவிதையிலும் இதே கருத்தைப்பதிவு செய்கிறார்.
‘’வேதம் கடல்மீன் புயல்காற்று மல்லிகைமலர்
இவை ஒரு பொருளின் பல தோற்றம்
உள்ளதெல்லாம் ஒரே பொருள் –ஒன்று
இந்த ஒன்றின் பெயர் ‘தான்’. தானே தெய்வம்
தான் அமுதம் இறவாது.’’-7.
என எல்லாப்பொருளிலும் இறைமை கலந்துள்ளமையை விவரிக்கிறார். அது மட்டுமல்ல எல்லாக்கடவுளரும் ஒன்றே என ஒற்றுமைப்படுத்துகிறார்.
‘ஆத்திசூடி
இளம்பிறையணிந்து
மோனத்திருக்கும்
முழுவெண் மேனியானாகிய சிவன், கருநிறம் கொண்டு கடல்மிசை கிடப்போனாகிய திருமால்,மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன், ஏசுவின் தந்தை எனப்பலவாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே அதன் இயல்பு ஒளியுறும் அறிவே! அதனியல் கண்டார் அல்லலை அகற்றினார்’-8 என்கிறார்.இதனையே திருமூலரும்
‘’ ஒன்றே குலமும் ஒருவனே தேவனுமாம்’’என்றார். இதுவே பாரதியின் பரிபக்குவ நிலை! உலகைக் கடந்து
நின்று பார்க்கும் கடவுள் நிலை!.மனிதர்கள் விரித்த மதவலையில் சிக்காத
உறவுகளும் கடவுளும் வேறல்ல! பாரதி உண்ணும்
சோறு பருகும் நீர் மெல்லும் வெற்றிலை அனைத்தும் கண்ணன் எனக்கருதுபவன். அதனால்
கண்ணனைத் தோழனாகவும் தாயாகவும் தந்தையாகவும் அரசனாகவும் சீடனாகவும் சற்குருவாகவும்
குழந்தையாகவும் விளையாட்டுப் பிள்ளையாகவும் காதலனாகவும் காதலியாகவும் குலதெய்வமாகவும்
ஏன் சேவகனாகவும் பாடமுடிந்தது பாரதியால்!கண்ணன் பாட்டு காட்டுவது
உறவுகளும் கடவுளும் வேறல்ல என்ற அத்வைத நிலையையே ஆகும்.
‘’ யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே
இங்கு யாவுமே’’-9.
என்பது கண்ணன் பாட்டின் கருத்தாகும்.
‘’அட விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும்
எண்ணிலும்
மேவுபராசக்தியே’’!-10.
‘’யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்’’-11.என்றெல்லாம் மீண்டும் மீண்டும் இறைவனின் எங்கும் பரவிய நிலையைப்பாடுகிறார்.
ஆன்மாவின் பாச விடுதலை; இறைமையை
அறியாது ஆன்மாக்கள் பாசத்தில் சிக்குண்டு துன்பத்தில் உழல்கின்றன. அதாவது உயிர்கள் தமது இறைத்தன்மையை உணர்ந்து இன்புறாமல் பாசத்தால் துன்புறுகின்றன
என்பது பாரதியின் கருத்தாகும். எனவே தன்னையுணர்ந்து புலன்களுக்கு
அடிமையாகிவிடாது மீண்டால் இன்பம் கிட்டும் என்கிறார்.இதனை
‘’தன்னைத்
தானாளும் தன்மை நான் பெற்றிடில்
எல்லாப்
பயன்களும் தாமே எய்தும்’’-12.என்கின்றார்.மேலும்
‘’விட்டுவிடுதலையாகி
நிற்பாய்-இந்தச்
சிட்டுக்குருவியைப்போலே!’’-13.
என்ற பாடல் வரிகள் பாசமாகிய சிறையிலிருந்து விடுதலையாக வேண்டுகின்றன.
“என்ன வரங்கள் பெருமைகள் வெற்றிகள்
எத்தனை
மேன்மைகளோ
தன்னைவென்றால் அவையாவும் பெறுவது
சத்தியமாகுமன்றே!
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்றும் உணர்ந்த பின்னும்
தன்னைவென்றாளும் திறமை பெறாதிங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?’’-14. எனத் தன்னைவென்றால் எதையும் பெறலாம். தன்னைவெல்லாவிடில் தாழ்வே எனக்குறிப்பிடுகிறார் .தன்னை வெல்லப் பாசங்கள் தடையாகும்.மனதிற்கு என்ற தலைப்பில்,
‘’சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக்குறித்தல் வேண்டா!’’-15 எனத் துன்பம் நீங்க முடிந்ததை நினைக்கவேண்டாம் என்கின்றார்.
‘’பலநினைந்து வருந்தியிங்கு என்பயன்?
பண்டு போனதை எண்ணி என்னாவது?
சிலதினங்கள் இருந்து மறைவதில்
சிந்தை செய்தெவன் செத்திடுவானடா?’’-16. என்பதில் பழையதை நினைத்து என்ன பயன்? ஆகப்போவது என்ன?வாழ்க்கை சில தினங்கள்தானே!
ஏன் செத்து மடிய வேண்டும்?என்ற பொருள் துளங்குகிறது.!
பாசவிடுதலைக்கு வழி; ‘’பிரபத்தி’’-என்ற
சரணாகதி மூலம் முக்தி அடையலாம் என்பது விசிஷ்டாத்வைதம் கூறிய இராமானுஜர் கருத்தாகும். இதனையும் பாரதி ஏற்கிறார்.
‘’நீயே சரணம்
தினதருளே சரணம் சரணம்
நாயேன் பல பிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்’’-17. எனக்கடைசியாகச் சரண்டைதல் தவிர வழியற்று வந்தேன். என வணங்குகிறார்.’’எது நிகழினும் நமக்கேன் என்றிரு பராசக்தி உளத்தின் படி உலகம் நிகழும் நமக்கேன் பொறுப்பு?’’-18.எனக் கண்டு கொள்ளாமல்
இருந்தலே இன்பவழி எனக்கூறுகிறார்.’’நின்னைச்சரணடைந்தேன் -கண்ணம்மா நின்னைச்சரணடைந்தேன்! தன்செயல் எண்ணித்தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வணம் நின்னைச்சரணடைந்தேன்’’-19 எல்லாம் தன் செயல் என உணர்ந்தால் நுன்பமில்லை எனவுணர்த்துகிறார்.’’நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி-கண்ணம்மா தன்னையே சசியென்று சரணமெய்தினேன்’’-20.’’தேடியுனைச்சரணடைந்தேன் தேசமுத்துமாரி கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்’’-21. என்றெல்லாம் பாடுகின்றார். நான் என்ற ஆணவம் அழிந்து சரண்புகவேண்டும் என்று சொல்ல.’’நான் என்றோர் தனிப்பொருள் இல்லை
நானெனும் எண்ணமே வெறும் பொய் என்றான் புத்தன்’’-என்று புறச்சமயியான வேதத்திற்கெதிரான புத்தரையும் மேற்கோள் காட்டுகிறார்.-22.’’சக்தி தொழிலே அனைத்துமெனில் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?’’-23. என்பதில் ‘சக்தி தொழிலே அனைத்தும்’ என்பது சரணாகதியை உணர்ந்த தன்மையாகும். பாசவிடுதலைக்கு எளிய வழி சரணடைதலாம்.
உலக இன்பம் நுகர்க; வேதாந்தத்தில் அனைத்தும் இறைவன் செயல் என்ற கொள்கையை ஏற்றுக்கொண்ட பாரதி சஞ்சலத்தை விட்டொழிக்க வேண்டுகிறார். ‘’கவலைப்படுதலே கருநரகம்மா கவலையற்றிருத்தலே முக்தி’’-24.என்கிறார். ‘’தத்வமஸி’’-என்பது சாம வேதத்திற்கான
மகாவாக்யமாகும்.
தத்-என்றால் அது(அப்பரம்பொருள்) துவம்-நீ(நீயாக) அஸி-உளாய். அதாவது
‘’நீ
அதுவாய் உளாய்’’ என்று கூறுகிறது. அப்பரம்பொருள் எல்லையில்லா இன்ப நிலையில் உள்ளது. மனிதனது இயல்பு நிலையும் இன்பநிலையாகும். துன்பம் பாசஞானத்தால் வந்தது. எனவே கவலையற்றிருத்தலே நன்று என்கின்றார் பாரதியார்.
‘’வியனுலகனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக்கை பிடித்தோம்’’-25.என உலக வாழ்வை நுகர்கிறேன் அதுதான் வேதவாழ்க்கை என உறுதியாகக் கூறுகிறார். ‘’சிட்டுக்குருவியைப் போலே மட்டுப்படாதெங்கும் கொட்டிக்கிடக்கும் இவ்வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு பெட்டையினோடு இன்பம் பேசிக்களிப்புற்று வாழவேண்டுகிறார்’’-26 ‘’இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்….தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்’27.அறிவுறுத்துகிறார். இதுதான் வேதவழியென்பதை,
‘’ ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள் உலகின்பக்கேணியென்றே-மிக
நன்றுபல் வேதம்’’-28.என்பதன் மூலம் கூறுகிறார்.’’இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமை உடைத்து
காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது’’-29.எனப்பாடல் முழுதும் இனிது எனக்கூறி அவற்றை நுகரவேண்டுகிறார்.
பாரதியின் சிறப்பு நோக்கு; ’எல்லா
சாத்திரங்களும்
ஏறக்குறைய உண்மைதான் ஆனால் எல்லோருக்கும் எப்போதும் ஒரே சாத்திரம் ஒத்து வராது’ என்கின்றார் பாரதியார் தம் ‘’பொய்யோ மெய்யோ’’ என்ற பாடலின் முன்னுரையில். ‘இந்த உலகமே பொய் என்று நமது தேசத்தில் ஒரு சாத்திரம் வழங்கி வருகிறது.துறவிகள் அதை ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கட்டும் அதைப்பற்றி இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை. குடும்பத்தில் இருப்போர்க்கு அந்தவார்த்தை பொருந்துமா?......நமக்குத் தந்தை வைத்துவிட்டுப்போன
வீடும் வயலும் பொய்யா? மனைவி பொய்யா? குழந்தைகள் பொய்யா?’ எனக்கேட்டு ‘’நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானா?’’ என்ற பாடலில்-30. காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை காண்பது சக்தியாம் இந்தக்காட்சி நித்தியமாம் எனத் தம்புதிய நோக்கினைக்கூறுகிறார். இத்தனைக்கும் பாரதி மிக மதிக்கும் அத்வைதமே ‘உலகத்தின் உண்மையற்ற நிலை’ பற்றிக்கூறுகிறது. அப்படியிருந்தும் பாரதியார் சற்றே மாறுபடுகிறார்.இதிலிருந்து பாரதி தனக்கெனத் தனித்த தத்துவ நோக்கினைக் கொண்டிருந்தார் எனக்கூற முடியும்.
பாரதி என்ற மெய்யறிவு பெற்ற ஞானி எல்லாத்தத்துவங்களையும் அறிந்து இருந்தார்.அவ்வவற்றில் நல்லனவெனத் தாம் கருதியதை ஏற்றார்.வேதாந்தத்திற்கெதிரான புத்தத்திலும் நல்லதை மேற்கோள் காட்டுகிறார். அண்டத்தில் பிண்டமும் பிண்டத்தில் அண்டமும் அடங்கியுள்ளன.பரமாத்வாவில் ஆத்மாவும் ஆத்மாவில் பரமாத்மாவும் அடங்கியுள்ளன என முடிபான கொள்கை கொண்டிருந்தார். தனக்கெனத் தனித்த தத்துவ நோக்கினைக்கொண்டிருந்தார் எனலாம்.
அடிக்குறிப்புகள்;
1.பாரதியார்-வேதாந்தப்பாடல்கள்-எண்-7.
2.பாரதியார்-விநாயகர் நான்மணிமாலை-எண்-11.
3.பாரதியார்-தோத்திரப்பாடல்கள்-எண்-36.
4.
பாரதியார்-வேதாந்தப்பாடல்கள்-எண்-30.
5.
பாரதியார்-வேதாந்தப்பாடல்கள்-எண்-11.
6.
பாரதியார்-வேதாந்தப்பாடல்கள்-எண்-25.
7.
பாரதியார்-வசனகவிதை-28-காட்சி-முதற்கிளை- இன்பம்-4.
8
.பாரதியார்-பல்சுவை-புதிய ஆத்திசூடி-எண்-3.
9.
பாரதியார்-தோத்திரப்பாடல்கள்-எண்-21.
10.
பாரதியார்-வேதாந்தப்பாடல்கள்-எண்-27.
11.
பாரதியார்-தோத்திரப்பாடல்கள்-எண்-37.
12.
பாரதியார்-விநாயகர் நான்மணிமாலை-எண்-8.
13.
பாரதியார்-வேதாந்தப்பாடல்கள்-எண்-18.
14.
பாரதியார்-வேதாந்தப்பாடல்கள்-எண்-27.
15.
பாரதியார்-வேதாந்தப்பாடல்கள்-எண்-24.
16.
பாரதியார்-ஸ்வசரிதை-47.
17.
பாரதியார்-விநாயகர் நான்மணிமாலை-எண்-2.
18.
பாரதியார்-விநாயகர் நான்மணிமாலை-எண்-36.
19.
பாரதியார்-கண்ணன்பாட்டு-எண்-8.
20.
பாரதியார்-தோத்திரப்பாடல்கள்-எண்-21.
21.
பாரதியார்-தோத்திரப்பாடல்கள்-எண்-42.
22.
பாரதியார்-விநாயகர் நான்மணிமாலை-எண்-36.
23.
பாரதியார்-வேதாந்தப்பாடல்கள்-எண்-27.
24.
பாரதியார்-விநாயகர் நான்மணிமாலை-எண்-36.
25.
பாரதியார்-வேதாந்தப்பாடல்கள்-எண்-7.
26.
பாரதியார்-வேதாந்தப்பாடல்கள்-எண்-18.
27.
பாரதியார்-வேதாந்தப்பாடல்கள்-எண்-24.
28.
பாரதியார்-தேசிய கீதங்கள்-8-3.
29.
பாரதியார்-வசனகவிதைகள்-காட்சி-28-முதற்கிளை-இன்பம்-1.
30.
பாரதியார்-வேதாந்தப்பாடல்கள்-எண்-29.
Comments
Post a Comment