குமரகுருபரரின் மீக்கற்பனை
குமரகுருபரரின் மீக்கற்பனை முனைவர் ச.இரமேஷ். சிற்றிலக்கியங்களின் பொதுவான தன்மைகளாக மிகுதியான கற்பனை , தனிமனிதப்புகழ்ச்சி , கடவுள் நம்பிக்கை , எளிய மக்கள் பற்றிய சித்திரிப்பு ஆகியவற்றைக்கூறலாம் . இவற்றில் அதீத மீக்கற்பனையே குமர குருபரரிடத்தில் விஞ்சித்தோன்றுவதாகக் கருதலாம் . இதனைத்தண்டி இலக்கணத்தில் உயர்வு நவிற்சி அணி அல்லது அதிசய அணி என்பர் . ‘’ மனப்படும் ஒருபொருள் வனப்பு உவந்து உரைப்புழி உலகவரம்பு இகவா நிலைமைத்து ஆகி ஆன்றோர் வியப்பத்தோன்றுவது அதிசயம் ’’1. அதாவது எல்லை மீறாது ஒரு பொருளின் தன்மையை ஆன்றோர் வியக்கும் படி கற்பனையில் உவமித்தலாகும் . அவ்வாறு வெளிப்படும் கற்பனையின் சுவைகளை இந்த ஆய்வுக்கட்டுரை வெளிப்படுத்துகிறது . குருபக்தியின் உச்சம் ; குமரகுருபரரின் குருநாதர் தருமபுர ஆதீனத்தின் நான்காம் சந்நிதானமாகிய சீர்வளர்சீர் மாசிலாமணிதேசிகர் ஆவார் . அவரைப்புகழ்ந்து வணங்கிக்குமரகுருபரர் பாடியது பண்டார மும் மணிக்கோவை என்னும் நூலாகும் . அந்நூலில் குமரகுர...