ஆதிபகவன் முதற்றே உலகு!-ஆய்வுரை
திருக்குறள்-விளக்கவுரை;
1.அறத்துப்பால்;
1;1. பாயிரவியல்.
1.1.1 கடவுள்வாழ்த்து;
1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம்; எல்லாமொழிகளும் 'அ' என்ற எழுத்தையே முதல் எழுத்தாகப்பெற்றுள்ளன.அதுபோலவே இவ்வுலகம் ஆதிபகவனாகிய முதல் இறைவனை முதன்மையாக உடையது.
ஆய்வு; திருவள்ளுவர் ஒரு கடவுள் நம்பிக்கை உடைய ஆத்திகப்புலவர்.அவரைச்சிலர் கடவுள் நம்பிக்கை அற்றவர்போலவும் கடவுளுக்குப் பதிலாக சூரியனைக் குறிப்பிடுகிறார் என்பது போலவும் பலவாறாக திரித்து உரைகாண்கின்றனர்.சிலர் தமக்குப்பிடிக்காத கருத்தை இடைச்செருகல் என்றும் கூறிவிடுகின்றனர். இடைச்செருகல் என்று கூற ஆரம்பித்தால் எல்லாநூற்கருத்துக்களையுமே இடைச்செருகல் என்று கூறிவிடலாம்.
'பொருள்முதல்வாதம்' என்றால் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்கள் கூறுகின்ற கருத்தாகும்.அதாவது 'கடவுள் என்ற ஒன்று முதலில் இல்லவே இல்லை.உலகம் உள்ளிட்ட அண்டங்கள்(பொருட்கள்) இயற்கையாகவே முன்பே இருந்தன,அவை யாராலும் படைக்கப்படவில்லை'.என்று கூறுவதாகும்.
'கருத்து முதல்வாதம்' என்பது கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கூறுகின்ற கருத்தாகும்.அதாவது 'கடவுள் முதலில் இருந்தார்.அவரே உலகைப்படைத்தார்' என்பதாகும்.கடவுள் என்பதை ஒருகருத்தாக மேலையுலக அறிஞர்கள் கருதி இந்தத்தலைப்பைக்கூறினர் போலும்.
இந்தப்பிரபஞ்சம் ஒரு கட்டுப்பாடும் ஒழுங்கும் உடையதாக இருக்கிறது.எனவே இதனை ஒரு படைப்பு என்றும் அது படைக்கப்பட்டது என்றும் கூறலாம்.'மண்ணால் ஆன சட்டி ஒரு மட்கலம்,அதில் ஒரு ஒழுங்கு உள்ளது.எனவே அது குயவனால் படைக்கப்பட்டது.'என்று மெய்யியலார் கூறுவார்கள்.''உளது,இலது என்றலின்- உளது''என்று மெய்கண்டார் சிவஞானபோதத்தில் கூறுவார் அதாவது 'இல்லாத ஒன்றை உள்ளது என்றும் இல்லை என்றும் உலகோர் பேசமாட்டார்கள், எனவே கடவுள் உண்டு என்றும் இல்லை என்றும் பேசப்படுவதால் கடவுள் உண்டு' என்று வாதிடுவார். மேலும்,
''அவன்,அவள்,அது எனும் மூவினமையின் தோற்றிய திதியே''
என்றும் கூறுகின்றார். அதாவது 'படைப்பில் ஆண்,பெண் என்று உயர்திணையாகவும் 'அது' என்று கூறப்படும் அஃறிணையாகவும் மூன்று இனங்களாகப் பிரித்துப் படைக்கப்பட்டுள்ளதால் அது தோற்றுவிக்கப்பட்ட பொருளே' அல்லாமல் இயற்கைப்பொருளல்ல என்று கூறுகிறார்.
''முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா?'' என்ற மொழி சிந்திப்பதற்கு உரியது.கோழியில்லாமல் முட்டையில்லை,முட்டையில்லாமல் கோழியில்லை.அப்படியானால் எது முதல்? இதற்கு ஒரே ஒரு விடைதான் கூறமுடியும்.அதாவது படைத்தவனால் மட்டுமே இதற்கு விடைகூறமுடியும்.மாறாக இயற்கை என்று எப்படிக்கூறமுடியும்? எனவே படைத்தோன் உண்டு. இந்த உலக நடைதான் உண்மை,கண்ணால் காண்பது மட்டுமே உண்மை என்ற நாத்திகக்கருத்தை திருநாவுக்கரசர்
''நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமாபூதங்கள்''
என்று மறுக்கின்றார்.எனவே வள்ளுவர் கடவுள் உண்மை என ஏற்கிறார் என்றே கொள்ளவேண்டும்.
Comments
Post a Comment