லியோடால்ஸ்டாயின் போரும்வாழ்வும் நூலிலிருந்து...
இதை என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை! என் ஆன்மாவின் தேடலுக்கு விடைகிடைத்தது இதோ!
லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நூலில் இருந்து….
கடவுள்,உயிர்கள்,தடை,விடை என எந்தநேரமும் மனம்குழம்பியவனாய் இருந்த எனக்கு அவ்வப்போது “ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்சோதிக்கவேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி” என்றும் “நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதீர் படைகள் போல் வரும் பஞ்சமா பாதகங்கள்” என்றும் நம் தமிழ் அருளாளர்கள் கூறியவை நினைவில்வந்து ஆறுதல்தருகின்றன.அதுபோலவே லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் என்ற நூலில் ஜூலி என்பவளுக்கு மேரி என்ற புனிதமான பெண் எழுதும் பதில் கடிதம் அமைகிறது.அதிலிருந்து சில…
“ஆ நம்மை ஆறுதல் செய்வதற்கு மதம் என்பது இல்லாவிட்டால் நமது வாழ்க்கையே மிகவும் துக்கமாய் போயிருக்கும்”
“கிருஸ்தவ அன்பு இருக்கிறதே அடுத்தவீட்டுக்காரரை நேசி-விரோதியை நேசி என்பவைகள் ஒருவாலிபனின் அழகிய கண்கள் கற்பனையும் காதலும் கொண்ட உன்னைப்போன்ற ஒரு இளம் மங்கையிடம் தோற்றுவிக்கக் கூடிய உணர்ச்சியைவிட மிக சிலாக்யமானவை,இனிமையானவை,உயர்ந்தவை என்றே எனக்குத்தோன்றுகிறது”
“நமது தெய்வீக ரட்சகர் சொல்லிய வார்த்தைகள்-ஊசியின் காது வழியாக ஒரு ஒட்டகம் நுழைவது ஒருவேளை சுலபமாக இருந்தாலும் இருக்கலாம்.ஆனால்,ஒருபணக்காரன்,தேவனின் ராஜ்யத்திற்குள் நுழைவது சாத்தியமல்ல”-இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல வேண்டும் வாசைலி என்பவர் தனக்கு வசதி வராது என்பதற்காக பெஜூகாவ் என்பவரது உயிலைக்கிழிக்க முயற்சிப்பார்,அதோடு பீயர் என்பவருக்கு இளம்வயதிலேயே மிகப்பெரிய சொத்து கிடைத்திருக்கும் இதற்குத்தான் மேரிமேற்கண்டவாறு கூறுகிறாள்.மேலும் “வாசைலிக்காக நான் இரங்குகிறேன்,இன்னும் அதிகமாக பீயருக்காகநான் வருந்துகிறேன்.இவ்வளவு இளமையில் இவ்வளவு ஏராளமான சொத்துகளுக்கு அதிபதியான அவர் என்னென்ன சோதனைகளுக்கெல்லாம் ஆளாக வேண்டியிருக்குமோ! இந்த உலகத்தில் நான் அதிகமாக விரும்புவது எது என்று என்னைக்கேட்டால்,மிகமிக எளிமையான பிச்சைக்காரியைவிட,எளியவளாக இருப்பதையே நான் விரும்புகிறேன் என்று சொல்வேன்”-இது எப்படி இருக்கு என்னைப்போன்ற ஏழைக்கு இதைவிட ஆறுதல்தரும் வாக்கியம் எங்கேயாவது இருக்கிறதா?
மாஸ்கோவில் மிகவும் பிரபலமான வேதாந்த ரகசியப்புத்தகத்தை ஜூலி மேரிக்கு அனுப்பியிருந்தாள்,அதுகுறித்து மேரி எழுதுகிறாள் படியுங்கள்,....”அதில் பலநல்லவிஷயங்கள் இருப்பதோடு, பலவிதமான மனிதமனம் புரிந்துகொள்ள முடியாத விஷயங்கள் இருப்பதாய் நீ எழுதியிருந்தாய்,புரியாதவிஷயங்களைப் படிப்பது;அதனால் பலன் ஏற்படாததோடு, காலத்தை வீணாக்கும் செயல் என்றும் எனக்குத் தோன்றுகிறது.வேதாந்த ரகசியப்புத்தகங்களைப் படித்துத் தங்கள் மனதைக்குழப்பிக்கொள்வதற்கு சிலருக்குஇருக்கும் ஆர்வத்தைப்பற்றிஎன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.அவை அவர்களின் சந்தேகங்களைக் கிளப்பிவிட்டு விஷயங்களை மிகைப்படுத்தும் வழியில் மனதைத் திருப்புகிறது.எளியமுறையை விரும்பும் கிறிஸ்தவ தத்துவத்திற்கு இதுமிகவும் முரண்பட்டதாகும்.நாம் சுவிசேஷங்களையும் ஸ்றிமுகங்களையும் படிப்போமாக.அவைகளில் என்ன ரகசியங்கள் இருக்கின்றன என்பதைநாம் துளைத்துப்பார்க்க வேண்டியதில்லை.ஏனெனில்,பரிதாபமான பாபிகளாகிய நாம்எப்படி கடவுளின் பயங்கரமான பரிசுத்தமான ரகசியங்களை அறியமுடியும்?இந்த பூத உடலில் நாம் இருக்கிற வரையில் கடவுளுக்கும்,நமக்கும் மத்தியில் துளைக்கப்படமுடியாத ஒருதிரையாக அதுவிளங்குகிறது.பூலோகத்தில் உள்ளநாம்,நமது தேவரட்சகர் நமக்கு வழிகாட்டுவதற்காக விட்டுப்போயிருக்கும் பரிசுத்தவிதிகளை அறிவதோடு அவற்றின்படி நடப்பதோடு நிறுத்திக்கொள்வோமாக. மனித உள்ளத்தைத் தன் விருப்பம்போல் அலையும்படி விடாமல்,எவ்வளவுக்கு எவ்வளவு நாம் தடுக்கிறோமோ,அவ்வளவுக்கு அவ்வளவு நாம் கடவுளை பிரீதி செய்கிறோம் என்பதை அறிவோமாக!”-எப்படி இருக்கிறது மேரியின் கடிதம்?இதை ஒரு கடித இலக்கியம் என்றே கூறலாம் அல்லவா?
இக்கடிதத்தால் நான் அறிந்து கொண்டவை:
1.மதம் மன அமைதி தருகிறது.
2.பணக்காரனாய் வாழ்வதைவிட ஏழையாய் வாழ்வது சிறந்தது.
3.வேதாந்த சித்தாந்தக்குழப்பங்களில் மனதை அலையவிட்டு விடைதேடித்துன்புறுவதைவிட பக்தியோடு முன்னோர் கூறியவழியில் வாழ்வது நல்லது.
4.மனிதனால் இறைமையை அறியமுடியாது.
படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்!
Comments
Post a Comment